பக்கம்:ஆண்மை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கடிதம்

லோகங்களைச் சிருஷ்டிக்க இறைவன் தங்களுக்குப் போதிய சக்தி அருளுவாராக.

  இப்படிக்குத்
தங்கள் விதேயன்
    நாகப்பன்.

கடிதத்தை வாசித்ததும் முகம் மலர்ச்சியடைந்தது. உள்ளம் பூரிப்படைந்தது. குதூகலம் பிறந்தது. மறுமுறையும் வாசித்தார் . இன்னொரு முறையும் வாசித்தார். அந்தக் கடிதம் அவருடைய ஒரு பெரிய தாபத்தைத் தீர்த்தது.

“நீ ஒருவன்தான். எண்ணிறந்தவர்களில் ஒருவனல்ல. சமூகத்தில் கொஞ்சம் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. முழு மோசமில்லை” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

கடிதத்தைச் சுந்தரத்திற்குக் காட்ட வேண்டுமென்ற ஆசை. ஆனால் அதில் என்னதான் இருக்கிறதோ? மறுபடியும் படிக்க ஆரம்பிக்கிறார். நாகப்பனுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுத வேண்டும் என்று நிச்சயித்தாகி விட்டது.

மறுபடியும் படிக்க வாரம்பித்த பிறகு, மனது திடீரென்று மாறுகிறது. சில சில எழுத்துக்கள் தெரிந்த, அறிமுகமான யாரோ ஒருவரின் கையெழுத்து மாதிரித் தெரிகிறது. ஆமாம்! யாரோ நமக்குத் தெரிந்த பயலுடைய வேலைதான். பிறகு எனது விலாசம் விசாகப்பட்டிக்கு யார் கொண்டு போய்க் கொடுக்கப் போகிறார்கள். இந்தப் புளுகு மூட்டையை என்னிடமா அவிழ்க்க வேண்டும்? சீச்சீ! முட்டாள்! கோழை! தைரியமிருந்தால், உண்மையில் ரஸித்தால், பகிரங்கமாகப் பத்திரிகைக்கு ஏன் எழுதக் கூடாது? அவன் ரஸித்தது என் சிநேகத்திற்குத்தான். சீ! இதை எழுதி விட்டால், எனக்குத் திருப்தி, சாந்தி, எல்லாக் குட்டிச் சுவரும் வந்து விடுமென்று எண்ணினானாக்கும்! முட்டாள்! அவனும் இந்த சமூகத்தில் ஒரு ஜந்துதானே! இந்த முட்டாள் கூட்டத்திற்குக் கதை எழுத வேண்டுமாம்! கதை! அதை விடக் கசையடி கொடுப்பேன். முட்டாள்கள்! தரித்திரக் கழுதைகள்! நாளைக்கு வரட்டும். கதை வேண்டுமாம் கதை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/27&oldid=1694330" இலிருந்து மீள்விக்கப்பட்டது