பக்கம்:ஆண்மை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

நன்மை பயக்குமெனின்

பலம்” என்று முடித்து விட்டு, “என்ன அண்ணாச்சி? என்ன விசேஷம்” என்றார்.

“ஒண்ணுமில்லை. அந்த விசயத்தை முடுச்சிக்கிடலாம் என்று வந்தேன்.”

“ஏது நம்ம துண்டில் ஏதும் மனத்தாங்கலாக எழுதிட்டேனா?”

“அதொண்ணுமில்லே. கையிலிருக்கப்ப குடுத்திடலாமென்று நினைச்சேன். எனக்குத்தான் மறதியாச்சே” என்று நோட்டுப் பொட்டணத்தைக் கையில் கொடுத்தார். அவர் பிரித்துப் பார்ப்பது போல் கவனித்து விட்டு, மடியில் வைத்துக் கொண்டார்.

“சரியாப் பாருங்க.”

‘அதுக்கென்ன! எல்லாமிருக்கும்! எங்க போகுது?’

‘அண்ணாச்சி நம்ம கிட்ட ஒரு விசயமில்லா?’…

‘சொல்லுங்க…’

‘நம்ம பையன் பீ ஏ தானே?’

‘தன் பெண்ணுக்கு வரன் தேடுகிறாரோ’ என்று நினைத்தார் பூவையாப் பிள்ளை.

‘ஆமாம் தங்கத்திற்கு வயதுதான் வந்து விட்டதே. எல்லாம் நாளும், கிழமையும் வந்தா முடியும். அதுக்கென்ன விசாரம்’ என்றார் பூவையாப் பிள்ளை.

‘அதில்லே அண்ணாச்சி. அவுஹ காலேசிலே ஒரு புஸ்தகம் இருக்கிறது. நான் எழுதும் புஸ்தகத்திற்கு அது கட்டாயம் எனக்கு வேண்டியது. எங்கேயும் கிடைக்காது. அவனை எடுத்து வரச் சொல்லுங்க. பிறகு, காணாமற் போய் விட்டதென்று விலையைக் கொடுத்து விடுவோம்’ என்றார்.

‘இம்பிட்டுத்தானே! ஏலே! அய்யா! நடராசாவை எங்கே?’

‘நீங்க அவனைப் புஸ்தகத்தை மாத்திரம் எடுத்து வரச் சொல்லுங்க. அவனுக்குத் தெரியாது சின்னப் பையன்.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/31&oldid=1694335" இலிருந்து மீள்விக்கப்பட்டது