பக்கம்:ஆண்மை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தனி ஒருவனுக்கு

சாப்பாடு. எங்களூர்ப் பாழ் மண்டபத்தில் கவலையற்ற நித்திரை. ஸ்வானுபூதி.

இதற்குள், யாரோ சுவாமியாரின் பூர்வாசிரம ரகசியத்தையறிந்து ஊர் பூராவும் பரப்பி விட்டார்கள். உளவு பார்க்க வந்தவன் என்ற தங்கள் கொள்கையையும் சேர்த்துக் கட்டி விட்டதினால், எங்களூர்க்காரர்கள் மதிப்பில், சுவாமியார் பதவியிலிருந்து, திருட்டுப் பேர்வழி என்ற ஸ்தானத்திற்கு இறங்கி விட்டார். பரி மறுபடியும் நரியாவது, திருவிளையாடல் காலத்துக்காரர்களுக்கு மட்டுந்தானா உரிமை?

இவ்வளவும் ஒரே நாளில்; இது சுவாமியார்—பாவம்—அவருக்குத் தெரியாது.

வழக்கம் போல், கப்பறையுடன் “அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான பொருளைத் தேடி” எங்களூர்க்காரருக்குத் தெரியப்படுத்தத் தெருக் கோடியில் வரு முன்னமே, அவரைச் சூழ்ந்து ஒரு பெரிய கூட்டம் கூடி விட்டது.

ஏசலும், இரைச்சலும் சுவாமியாருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அவரும் காதுள்ள, சாதாரண அறிவுள்ள மனிதன்தானே! பூர்வாசிரமக் கதைதான் இந்த விபத்திற்குக் காரணம் என்று தெரிந்து கொண்டார். தெரிந்து என்ன செய்கிறது? அதற்குள்தான் மரத்துடன் வைத்துக் கட்டியாகி விட்டதே.

தர்மத்தின் காப்பாளர்களும், நீதியின் பொக்கிஷங்களுமான பெரியார்கள் நிறைந்த இந்தக் கிராதக யுகத்து எங்களூர் வாசிகள், இம்மாதிரியான மோசத்தையும், புரட்டையும் பொறுத்திருப்பார்களா? நியாயத்தைப் பரிமாறுவதற்காகக் கருட புராணத்தைப் பாராயணம் செய்த, ஹிந்து தர்மத்தின் மெய்க்காப்பாளர்களான எங்களூர்ப் பெரியார்கள், அதற்குத் தகுந்த மகத்தான ஒரு மன நிலையைத் திருப்தி செய்தார்கள்.

இந்தத் ‘திருத்தொண்டினால்’ சுவாமியாரை எளிதில் கண்டு பிடிக்க முடியாது போய் விட்டது. காலில் பலத்த காயம். முகத்தில், முதுகில் புளியம் விளார்களின் முத்தத்தினால் உண்டான இரத்தம் உறைந்த நீண்ட வரைகள். உடம்பு முகம் முழுதும் ஒரே வீக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/43&oldid=1694402" இலிருந்து மீள்விக்கப்பட்டது