பக்கம்:ஆண்மை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனி ஒருவனுக்கு

43

“பயம் இருக்கட்டும். உன்னை ஜெயிலுக்கு அனுப்பாமல், மன்னிக்கிறோம். ஓடிப் போ,” என்று தங்கள் தயாள சிந்தனையைச் சுவாமியாருக்கு எடுத்துக் காட்டி, ஊருக்கு வெளியே பிடித்து நெட்டித் தள்ளி விட்டார்கள். சுவாமியாருக்கு, அந்தப் பாழ் மண்டபத்தையடைவதற்குள், மோக்ஷமோ, நரகமோ இரண்டிலொன்றிற்குப் போய் விட்டுப் பத்துத் தடவை திரும்பி விடலாம் என்று தோன்றிற்று.

இதற்கு மேல், எங்களூரில் கவந்தப் படலத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்குமானால், அவரைப் பைத்தியக்காரன் என்று சொல்லி விடலாம். சுவாமியார் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால், இந்த ஊரை விட்டுப் போவதற்கும்தான், இவ்வூர் மஹா ஜனங்களின் அன்பின் திருத்தொண்டின் மூலமாகக் காண்பித்து, அவரை அங்கிருந்து அகலாமலிருக்கும்படி செய்து விட்டார்களே.

அந்தப் பாழ் மண்டபம் எப்படி இருந்தாலும், வேளைக்கு வேளை உணவும், மருந்தும் கொடுக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரி அல்ல. மூன்று நாட்கள் அவர் இருந்த ஸ்திதியில், அங்கு இருந்தால், வலுவில் சுமத்தப்பட்ட உண்ணாவிரதம்தான் நிச்சயம்.

காய்ச்சல், வலி, பசி தாகம் இவைகளின் கூத்துப் பொறுக்க முடியவில்லை. சற்றுத் தூரத்திலுள்ள கோபுரங்களிலும், மரக் கிளைகளிலும், சுவாமியாரின் இறுதியை எதிர்பார்த்து, அவரைத் தங்கள் வயிற்றில் சமாதியடையச் செய்ய, காக்கைகளும், கழுகுகளும் காத்திருந்தன. அவைகளும் இவரைத் தீண்டாத பறையன், பதிதன் என்று நினைத்தோ என்னவோ, கிட்டவே நெருங்கவில்லை.

ஊருக்கு வெளியிலே, அந்தப் பாழ் மண்டபத்தின் பக்கத்தில்தான் ஒரு சுடலை மாடன் பீடம். ஊரின் காவல் தெய்வம் என்ற கௌரவத்துடன், நமது அரசாங்கத்துடன் கூட்டுறவு செய்து கொண்டு, வரி வாங்கும் தொல்லைகள் எல்லாம் அற்ற ஒரு மௌன அரசாட்சி நடத்திக் கொண்டிருந்தது. அதைப் பற்றிக் கதைகள் பல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/44&oldid=1694403" இலிருந்து மீள்விக்கப்பட்டது