பக்கம்:ஆண்மை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனி ஒருவனுக்கு

45

3

ரில் கொஞ்சம் பரபரப்புத்தான். சுடலையின் சக்தி வெளியாகும் பொழுது, இல்லாமலா இருக்கும்?

திடீரென்று இறந்தவனை, அறுத்துச் சோதனை செய்யாமல், போலீஸ் விசாரணையில்லாமல் புதைத்து விட முடியுமா? எங்களூர் டாக்டரும், இன்ஸ்பெக்டரும் தேச பக்தர்கள் அல்ல; ஆனால், கிழக்கு மேற்காக இரண்டரைப் பர்லாங்கும், தென் வடலாக ஒன்றரைப் பர்லாங்கும் விஸ்தீரணமுள்ள எங்களூர் நிலப் பரப்பைப் பொறுத்த மட்டில் தேசபக்தர்கள்தான். வீண் ஆர்ப்பாட்டம் செய்து, ஊரைக் கெடுக்க வேண்டாம் என்று, பட்டினியால் இறந்தான் என்ற முடிவிற்கு வந்தார்கள்.

பிறகு என்ன? புதைக்க வேண்டியதுதான் பாக்கி.

எங்களூர் ஆஸ்பத்திரித் தோட்டி, இந்த மாதிரி பிணங்களைப் புதைத்து விடுவதில், சமர்த்தன். ஒருவனே முடித்து விடுவான். ஒற்றைக் கம்பில் பிணத்தை இறுக்கிக் கட்ட வேண்டியது—தலை சற்றுத் தொங்கினால், என்ன மானம் போய் விட்டது? மேலே, மண் வெட்டியைச் சொருக வேண்டியது; விறகுக் கட்டை போல், தலையில் தூக்கிக் கொண்டு போய்ப் புதைக்க வேண்டியது. இதுதான் அவனுக்குத் தெரியும். அதில் அவன் “எக்ஸ்பர்ட்.”

அன்று சாயங்காலம்; அதாவது பிணத்தை அறுத்துச் சோதித்த அன்று, சாயங்காலம்:

அப்பொழுது எங்களூர் கோகலே ஹாலில் “பாரத ஜனங்களின் தற்கால நிலைமை” என்ற பிரசங்கம். ஊர் பூராவாகவும், திரண்டு இருந்தது; அதைக் கேட்க, அவ்வளவு உற்சாகம். முதலிலே, ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற பாட்டை, ஒரு நண்பர் வெகு உருக்கமாகப் பாடினார்.

“தனியொருவனுக்கு உணவில்லையெனின், ஜகத்தினையழித்திடுவோம்” என்ற அடிகள் வந்தவுடன், என்ன உருக்கம்! என்ன கனிவு! நாங்கள் ஆனந்த பரவசத்தில் கை தட்டினோம்!

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/46&oldid=1694428" இலிருந்து மீள்விக்கப்பட்டது