பக்கம்:ஆண்மை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய நந்தன்

47

உண்மைகளிலும் அபார நம்பிக்கை. இதையறிந்து நடப்பவர்கள்தான் அவருடைய பக்தர்கள்.

அவருக்கு ஒரு பையன், பெயர் ராமநாதன். எம்.ஏ.படித்து விட்டு, கலெக்டர் பரிக்ஷை கொடுக்க விருந்தவன். ஏதோ பைத்தியக்காரத் தனத்தினால்—இது அவர்கள் வீட்டிலும், அக்ரகாரத்திலும் உள்ள கொள்கை—சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு விட்டான். பையனுக்கு இதிலிருந்த பிரேமையை, ஒரு நல்ல சம்பந்தத்தில் ஒழித்து விடலாம் என்பது சிரௌதியின் நம்பிக்கை. பிள்ளையின் பேரிலிருந்த அபார வாத்ஸல்யத்தின் பயன்.

2

சேரியிலே கருப்பன் ஒரு கிழட்டு நடைப் பிணம். 60 வயது. பெரிய நயினாரின் தோட்டக் காவல். இதில் ஒரு ஸ்வாரஸ்யம். கருப்பன் சிறு பிராயத்தில் தெரியாத்தனத்தினாலோ, ஐயரவர்கள் இப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கிறபடி, பறக்கிறதுனாலோ, ஒரு நாள் இரவு, அக்ரஹாரத்தில் இருக்கும் தெப்பக் குளத்தில் இறங்கி, ஒரு கை தண்ணீர் அள்ளிக் குடித்து விட்டான். கோயில் தெய்வத்தின் உலாவுப் பிரதிநிதியான சுப்பு சாஸ்திரிகள் கண்டு விட்டார். அக்ரஹாரத்தில் ஏக அமளி. அப்பொழுது சிறுவனாகவிருந்த விஸ்வநாத ச்ரௌதி, தன்னை மீறிய கோபத்தில் அடித்த அடி, கருப்பனைக் குருடாக்கியது. விளையும் பயிர் முளையிலே தெரியாதா?

ஆனால் ச்ரௌதி இளகிய மனம் உடையவர். கருப்பனுடைய ஸ்திதிக்கு மிகவும் பரிதபித்து, தோட்டத்தில் காவல் தொழிலைக் கொடுத்தார். கல்யாணம் செய்து வைத்தார். தோட்டத்திலே குடிசை கட்டிக் கொடுத்தார். பிறகு தங்கக் கம்பியாகி விட்டான் என்று எல்லோரிடத்திலும் சொல்லுவதில் வெகு பிரேமை.

3

தெல்லாம் பழைய கதை.

கருப்பன் குருடனாகி விட்டால், குழந்தைகள் பிறக்காதா? முதலில் ஒரு ஆண் குழந்தை. அவன் பெயர் பாவாடை. ஆண்டை சின்னசாமியும், ஏறக்குறைய இதே காலத்தில்தான் பிறந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/48&oldid=1694434" இலிருந்து மீள்விக்கப்பட்டது