பக்கம்:ஆண்மை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

புதிய நந்தன்

இராமநாதன் சில சமயங்களில் தோட்டக் காட்டிற்கு வரும் பொழுது, பாவாடையுடன் கேணியில் முக்குளித்து விளையாடுவதிலும், மரக் குரங்கு விளையாடுவதிலும் பரம உத்ஸாகம்.

அதெல்லாம் பழைய கதை.

இரண்டு பேரும், வித்தியாசமான இரண்டு சமூகப் படிகளின் வழியாகச் சென்றார்கள். இரண்டு விதமாகக் கண்டார்கள்.

பரமண்டலங்களிலிருக்கும் பிதாவாகிய கர்த்தரின் நீதிகளை, ஆதனூரில் பரப்பும்படி ரெவரெண்ட் ஜான் ஐயர் ஒரு தடவை ஆதனூர் சேரிக்கு வந்தார். பாவாடையின் புத்தி விசேஷத்தைக் கண்டு, அவனைத் தம் மதத்தில் சேர்க்க அனுமதித்து விட்டால், பெரிய பண்ணை மாதிரி ஆக்கி விடுவதாக ஆசை காட்டினார். கருப்பனுக்கு, தன் மகன், “இங்குருசி” (English) படிக்க வேண்டுமென்று ஆசை. நீட்டுவானேன்? பாவாடை ஜான் ஐயருடன் சென்றான்.

ரெவரெண்ட் ஜான் ஐயர் வேளாளக் கிருஸ்தவர். முதலில், போர்டிங்கில் போட்டுப் படிக்க வைத்தார். பையன் புத்தி விசேஷம், மிகுந்த பெயருடன் 10 கிளாஸ் படிக்கும் வரை, பிரகாசித்தது. இன்னும் பிரகாசிக்கும். பரமண்டலங்களிலிருக்கும் கர்த்தரின் விதி வேறு விதமாக இருந்தது.

ஜான் ஐயருக்கு ஒரு பெண் உண்டு. மேரி லில்லி என்ற பெயர். நல்ல அழகு.

அவளும், அந்த மிஷன் பள்ளிக்கூடத்தில், ஆண் பிள்ளைகளுடன் படித்தாள். எல்லாவற்றிலும் முதல் மார்க் எடுக்கும், பாவாடையிடம் (இப்பொழுது அவனுக்கு தானியேல் ஜான் என்ற பெயர்) சிறிது பிரியம் நட்பு, வர வரக் காதலாக மாறியது.

கிருஸ்தவ சமுதாயத்தில், இந்துக் கொடுமைகள் இல்லையென்று ஜான் ஐயர் போதித்ததை நம்பி, மனப்பால் குடித்த ஜான் தானியேல், ஒரு நாள் ஐயரிடம் நேரிலேயே தன் கருத்தை வெளியிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/49&oldid=1694438" இலிருந்து மீள்விக்கப்பட்டது