பக்கம்:ஆண்மை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

புதிய நந்தன்

பட்டு விட்டது. தனது பிரசங்கங்கள் படித்தவர்களிடத்தில் செல்லும்; இந்த வாயில்லாப் பூச்சிகளிடத்தில்?

4

ராமநாதன் வீட்டில் செல்லப் பிள்ளை. இட்டது சட்டம். பக்கத்து ஜில்லாத் தலைநகரில் மெட்ரிக்குலேஷன் வரை படித்தான். அவனுடைய படிப்பு வேறு ஒரு தினுஸு. கெட்டிக்காரன்; பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல. சிலரைப் போல், பள்ளிக்கூடத்தில் மூழ்கி விடவில்லை. காலத்தின் சக்தி வசப்பட்டு, அதன் நூதன உணர்ச்சிகளில் ஈடுபட்டு இன்பப்பட்டவன்.

சென்னைக்குச் சென்று, மேல்ப் படிப்புப் படித்தான்; எம்.ஏ.வரையில். அதற்குள் 1930 இயக்கம் வந்தது. தந்தை நினைத்த கலெக்டர் பதவியை விட்டு, தடியடி பட்டு ஜெயிலுக்குச் சென்றான்.

ஜெயிலில் இருந்து வந்ததும், ஹரிஜன இயக்கத்தில் ஈடுபட்டான். தகப்பனாருக்கு வருத்தம்தான். ராமநாதனின் அசையாத மனத்தின் முன், ச்ரௌதியின் அன்புதான் நின்றது. கொள்கைகள் பறந்தன.

ஒரு தடவை ஆதனூருக்கு வந்திருந்தான். அப்பொழுது, கருப்பனின் மகளுக்கு வயது வந்து விட்டது. நல்ல இயற்கையின் பூரண கிருபை இருந்தது.

ஒரு நாள் இரவு நல்ல நிலா. தோட்டத்திற்குச் சென்றான். இரவு கொஞ்ச நேரந்தான். அதுவும் ஆதனூரில் கேட்க வேண்டுமா?

தோட்டக் கிணற்றில் யாரோ குதிப்பது போல் சப்தம். ஓடிப் பார்க்கிறான்; ஒரு பெண் உள்ளே, அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. உடனே அவனும் குதித்தான்.

“சாமி,கிட்ட வராதிங்க, பறச்சி, கருப்பன் மவ. சும்மானாச்சிங் குளிக்கறேன்” என்ற குரல்.

“சரி சரி, நீ விழுந்து விட்டாயாக்கும் என்று நினைத்தேன். எறி வா” என்று கரை ஏறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/51&oldid=1694441" இலிருந்து மீள்விக்கப்பட்டது