பக்கம்:ஆண்மை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய கந்தப் புராணம்
தற்சிறப்புப் பாயிரம்

ரண்டும், இரண்டும் நான்கு என்ற மகத்தான உண்மையைக் கவிதையாக இசைக்கும் இந்தக் காலத்தில், உள்ளது உள்ளபடியே சொல்ல வேண்டுமென்ற சத்திய உணர்ச்சியும், பகுத்தறிவும் பிடர் பிடித்துத் தள்ளும் இந்தக் காலத்திலே, அதன் தனிப் பெருமையாக ஓர் அழியாத காவியம் செய்ய என்னை, எனது உள்ளுணர்வு தூண்டியது. அதன் விளையாட்டை, யாரேயறிவர்! இந்தக் காவியத்தில், பச்சை உண்மையைத் தவிர வேறு சரக்கு ஒன்றும் கிடையாது. ஆதலால், பகுத்தறிவு அன்பர்களும், ஏனையோரும் படித்து இன்புறுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். காவியமும், உங்களைக் களைப்புறுத்தாதபடி, கம்பனைப் போலல்லாமல், சிறிய கட்டுக்கோப்பிலிருப்பதற்கு, நீங்கள் எனக்கு வந்தனமளிக்க வேண்டும்.

நாட்டுப் படலம்
திருநெல்வேலி ஜில்லா, மூன்று விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றது. ஒன்று சிவன் என்ற ‘பிறவாத பெம்மான்’ பிறந்தது. இரண்டாவதாகத் தென்றல் பிறந்தது அங்கு. மூன்றாவதாகத் தமிழ் பிறந்ததும் அங்குதான். இந்த மூன்று பெருமையிலேயே, 20-ம் நூற்றாண்டு வரை திருநெல்வேலி ஜில்லா மெய்மறந்து இருந்தது.

துன்பம் தொடர்ந்து வரும் என்பது பழமொழி. புகழும், பெருமையும் அப்படித்தான் போலிருக்கிறது. 20-ம் நூற்றாண்டிலே, உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, இந்தப் பொல்லாத அதிர்ஷ்டம், மறுபடியும் திருநெல்வேலியைத் தாக்கிற்று. இந்த முக்கியமான சம்பவம் என்னவெனில், கந்தப்ப பிள்ளை 1916-ம் வருடம் திருநெல்வேலியில் திரு அவதாரம் செய்தது தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/58&oldid=1694485" இலிருந்து மீள்விக்கப்பட்டது