பக்கம்:ஆண்மை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

கிடந்த அந்தக் குழந்தையை எடுத்து வந்து, ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காக, நானும் பி. எஸ். ராமையா என்ற நண்பரும், எங்களைப் போலவே, உத்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சில சக எழுத்தாளர்களும் சேர்ந்து, நடத்தி வந்தோம். அது, இரண்டு மூன்று வருஷங்களில், கன்னிப் பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில், அதைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஓடும் நண்பரைப் பெற்றோம். அவர் அவளை ஒருவருக்கு விற்றார். விற்ற உடனே, அவளுக்கு ஜீவன் முக்தி, இந்தக் கலி காலத்தில் கிடைத்தது. இதுதான் மணிக்கொடியின் கதை. இதுதான் தமிழிலே புதிய பரிசீலனைகள் செய்ய வேண்டும் என்று கோட்டை கட்டியவர்களின் ஆசையின் கதை. இந்தக் கதையின் ஒரு அம்சம் எனது கதைகள்.

மணிக்கொடிப் பத்திரிகையில் எழுதியவர்களில், பெரும் கேலிக்கும், நூதனம் என்பதனால் ஏற்படும் திக்பிரமைக்கும் ஆளான ஒரே கதாசிரியன் நான். சரஸ்வதி பத்திரிகை ஆசிரியர் என்ற தலைப்பில், நையாண்டி செய்யப்பட்ட கௌரவம் எனக்கு ஒருவனுக்குத்தான் கிடைத்தது. கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு, வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அதைக் கையாண்ட நானும், கல்வி கற்றதின் விளைவாக பாஷைக்குப் புதிது. இதனால், பலர் நான் என்ன எழுதுகிறேன் என்பது பற்றிக் குழம்பினார்கள். சிலர் நீங்கள் எழுதுவது, பொது ஜனங்களுக்குப் ‘புரியாது’ என்று சொல்லி, அனுதாபப்பட்டார்கள். அந்த முறை நல்லதா, கருத்து ஓட்டத்திற்கு வசதி செய்வதா என்பதை, அதே முறையில் பலர் எழுதிய பின்புதான், முடிவு கட்ட முடியும். அந்த முறையை, நானும் சிறிது காலத்திற்குப் பிறகு, கை விட்டு விட்டேன். காரணம், அது சௌகரியக் குறைவுள்ள சாதனம் என்பதற்காக அல்ல. எனக்குப் பல முறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால், அதைக் கை விட்டு, வேறு வழிகளைப் பின்பற்றினேன். இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/6&oldid=1694168" இலிருந்து மீள்விக்கப்பட்டது