பக்கம்:ஆண்மை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

புதிய கந்தப் புராணம்

ஆயிற்று. அவரது குரு, கல்வி என்ற ஹோதாவில், புதிதாக ஒன்றும் சொல்லிக் கொடா விட்டாலும், “தான் பெற்று, தாய் வளர்த்த” கந்தப்ப பிள்ளையின் பிலாக்கணத் தத்துவத்தை, அருங் கலையாகத் தமது செங்கோலால் பாலித்து வந்தார்.கந்தப்ப பிள்ளையும், உருண்டு செல்லும் கல் போலும், காற்றிலகப்பட்ட காற்றாடி போலும், வகுப்புப் படிகளைக் கடந்து, கல்விக் கோயிலின் வெளி வாயிலை யடைந்தார்.

திருமணப் படலம்
ச்சமயத்தில், அம்மையப்ப பிள்ளையும், சிவகாமியம்மாளும் ஒரு சிறு கூட்டுக் கமிட்டியில் ஆலோசித்து, தமது திருமகனுக்குத் திருமணம் செய்விப்பது என்று தீர்மானித்தார்கள்.

வேங்கை மரத்தடியில், யானையைக் கொண்டு பயமுறுத்திக் காதல் கொள்ள, வண்ணாரப்பேட்டையில் வசதியின்மையால், “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று, 4000 ரூபாய் தொகையுடன், தினை விளை கிராமத்து நம்பியா பிள்ளையின் ஏக புத்திரியாகிய ஸ்ரீமதி வள்ளியம்மாளை மணம் செய்ய உடன் பட்டார். திருமணம் ஏக தடபுடலாக, அதற்கிருக்க வேண்டிய சண்டை, தோரணைகளுடன் இனிது நிறைவேறியது. மணம் முடியும் வரை, கந்தப்ப பிள்ளைக்குத் தனது சகதர்மிணியைப் பார்க்கத் தைரியமில்லாமலிருந்தது. மணம் முடிந்த பிறகும் பார்க்காமலிருக்க முடியாதாகையால், பார்த்தார். அம்மணி என்னவோ அவர் கண்களுக்கு அழகாகத்தான் தோன்றினாள்.

அவருக்குத் தமது சகதர்மிணியைப் பற்றிக் கிடைத்த செய்திக் குறிப்பில், அவள் படித்தவள் என்றும், சங்கீதப் பயிற்சி உடையவள் என்றும் கண்டிருந்தது. அவள் கல்வி ‘குட்டிப் பாலர்’ என்பதில் முற்றுப்புள்ளி பெற்றது என்றும், ஹார்மோனியம் வாசிப்பது, சுருதிக் கட்டைகளின் மீது எலி ஓடுவது போன்ற இனிய கீதம் என்றும் கண்டு கொண்டார். திரு. கந்தப்ப பிள்ளைக்கு சங்கீதம் பிளேட் கேள்வி ஞானம். அதிலும் வண்ணாரப்பேட்டையில் கிடைக்கக் கூடிய ஓட்டைப் பிளேட் ஞானம். இரண்டும் ஏறக் குறைய ஒத்திருந்ததினால், தமது சகதர்மிணிக்கும் சங்கீதப் பயிற்சி உண்டு என்பதை உணர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/61&oldid=1694489" இலிருந்து மீள்விக்கப்பட்டது