பக்கம்:ஆண்மை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

திரும்பிப் பார்க்கும்போது, அவை உலக வளர்ச்சியில் பரிணாம வாதத்தினர் சொல்வது போல, இலக்கிய வளர்ச்சியின் தெரு வடச்சான் சந்துகளாக அங்கேயே வளர்ச்சித் தன்மை மாறி நின்று விட்டன. இன்று அவற்றை ஆற அமரப் படித்துப் பார்த்துத்தான் முடிவு கட்டவேண்டும். எனது முயற்சி பலிக்காமல் போயிருக்கலாம். அதனால், முறை தப்பானது என்று முடிவு கட்டி விடக் கூடாது. நான் அறியாமல் வகுத்துக் கொண்ட எனது பாதையைப் பற்றி, இன்னும் ஒரு வார்த்தை. நான் எந்தச் சமயத்தில், இந்தத் தவளைப் பாச்சல் நடையை பின்பற்றினேனோ, அதே சமயத்தில், மேலை நாடுகளில் அதுவே சிறந்த சிகரமாகக் கருதப் பட்டது என்பதைச் சமீபத்தில் நான் ஒரு இலக்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, கேட்டு அறிந்தேன். இலக்கிய சிங்காசனத்தில் ஏறி அமர்ந்து கொள்ள எனக்குத்தான் உரிமை என்று, கட்சி பேச நான் இந்தக் கருத்தைச் சொல்ல வரவில்லை. கருத்துக்கள் நமது தேசத்து மன உளைச்சல்களின் உருவகமாக இருந்தாலும், என் போக்கு, உலக இலக்கியத்தின் பொதுப் போக்கோடு சேர்ந்து இருந்தது என்பதை எடுத்துக் காட்டவே இதைக் குறிப்பிட்டேன்.

இனி மேல், படித்துப் பாருங்கள்.

29-8-47

—புதுமைப்பித்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/7&oldid=1694174" இலிருந்து மீள்விக்கப்பட்டது