பக்கம்:ஆத்மஜோதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

ஆத்மஜோதி

கற்புடை மங்கை ஒருதரம் ஒருவனைக் காதலித்து விட்டால், அவனையன்றி வேறு எவர்க்கும் தன் தரவே மாட்டாள். மங்கையின் வாழ்வில் உள்ளத்தைத் ஒருதரம் தான். அவள் தன் இதயத்தைத் தர இயலும். அது கிட்டாதாயின், வெட்டென மறந்து யாவற்றையும் துறப்பதே கற்பின் சிறப்பு. உதாரணமாக:-

அப்பரின் தமக்கை திலகவதியார். தாம் கோரிய கலிப்பகையார், திருமணத்திற்கு முன்பே இறந்த போதிலும், வேறு ஒருவரை மணம் புரியாது தவ வாழ்க்கையைக் கைக் கொண்டார்.

காரைக்கால் புனிதவதியாரும் கூட, இனிமேல் தமக்குத் தம் கணவனின் உறவு முன்போல் அமையாது என்று தெரிந்ததும், தம் தவ வாழ்வுக்குப் பங்கம் ஏதும் வராது "காரைக்கால் பேய் அம்மையார்" ஆன விபரங்கள் இக் கற்பின் திறத்தாலேயே. அதுபற்றியே ஆண்டாளும், கண்ணனையன்றி வேறு எவரைப் பற்றியும் பேச இடந் தரவில்லை. பெரியாழ்வார், உலக வழக்கையொட்டி வரனை நினைந்த போது, வருகிறது ஆண்டாளின் தீவிரமான வார்த்தை!


"வானிடை வாழும் அவ்வானவர்க்கு
  மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத்திரிவது ஓர் நரி புகுந்து.
  கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப,
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கு என்று
  உன்னித்து எழுந்த என் தடமூலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
  வாழ்கில்லேன் கண்டாய்"

என்பதாக!

தன் கருத்துக்குரியானை அடைவதில் அவள் மேற்கொண்ட ஆத்மஸாதனம், விரதங்கள், பிரிந்து உழலும் துன்பம் முதலான இவைகளை அவளது திருவாய் மலர்ந்த திருமொழிகளைப் படித்தே அறியலாம்; ஆண்டாளோடு இணைந்து நாமும் அனுபவிக்கலாம். ஆண்டாளின் காதல் வெள்ளம் பாய்ந்து ஓடும் திருமொழிப் பிரவாகத்தில், உலக நடைமுறையை ஒத்த பரிபாஷைகள் கவியின்பம் துலங்க, காவியமோ அல்லது நாடகமோ என்று மிளிர்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/20&oldid=1524587" இலிருந்து மீள்விக்கப்பட்டது