பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 ஆத்மாவின் ராகங்கள் தலைமை வகிக்க மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தார். பின்னால் சென்னையில் பார்லிமென்டரி தூதுக் குழுவையும் சந்தித்தார். சென்னையில் மகாத்மாவின் பிரார்த்தனைக்கும், கூட்டங்களுக்கும் இலட்சக் கணக்கில் மக்கள் கூடினார்கள். இந்திப் பிரச்சார சபைக்கருகே அவர் தங்கியிருந்த இடத்தில் திருவிழாக் கூட்டம் கூடியது. மகாத்மாவைத் தரிசிப்பதிலும், அவருடைய பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வருவதிலும், உபதேசங்களைக் கேட்பதிலும் சென்னை மக்கள் அளவற்ற உற்சாகம் காட்டினர். ஒரு வாரத்துக்கு மேல் சென்னையில் தங்கிவிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் பழனி முருகனையும் தரிசிப்பதற்காக மகாத்மா தெற்கே மதுரைக்கு வந்தார். எப்படியாவது முயன்று, அந்த மகாபுருஷனின் திருவடிகள் சத்திய சேவாசிரமத்து மண்ணிலும் படவேண்டுமென்று ஏற்பாடு செய்ய முயன்றார்கள் பிருகதீஸ்வரனும், ராஜா ராமனும் ஒரு மணி நேரமாவது அவர் ஆசிரமத்தில் வந்து இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துக் கேட்டும் பயனில்லை. மகாத்மாவின் பிரயான ஏற்பாடு களை உடனிருந்து கவனித்த எல். என். கோபாலசாமியைச் சந்தித்து வேண்டிய போதும் முடியவில்லை. மகாத்மாவின் பிரயாணத் தளர்ச்சி காரணமாகவும், சத்தியசேவாசிரமத்துக்கு ஒரு மணி நேரம் பிரயாணத் தொலைவு இருந்ததன் காரணமாகவும், வரவேற்புக்குப் பொறுப்பான தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போய்விட்டது. எனினும் மகாத்மாவைச் சந்தித்து வணங்கும் பாக்கியமும், ஆசிரமம் நன்றாக வளர்ந்து நாட்டுக்குப் பயன்படவேண்டும்' என்று அவர் வாய்மொழியாகவே ஆசிபெறும் பேறும் அவர்களுக்குக் கிடைத்தது.

"எல்லாத் தொழில்களையும், யந்திரமயமாக்கி விட்டால் கிராமங்களும், தரித்திர நாராயணர்களும் வருந்திப் பாழடைய நேரிடும். சர்க்கா, நெசவு போன்ற குடிசைத் தொழில்கள் பெருகவும், வளரவும் உங்கள் சத்திய சேவாசிரமம் பாடுபடவேண்டும்' என்று