பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஆனந்த முதல் ஆனந்த வரை அதற்குச் சென்று அந்தப் பந்தலில் ஒரு நாடகம் நடிக்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. நானும் மகிழ்ந்தேன். காங்கிரசைப்பற்றி எல்லாம் அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. எனினும் நண்பர்களுடன் கூட்டமாகச் செல்லப் போகும் எண்ணம் சிந்தைக்கு இனிமை தந்தது. ஏற்பாடுகள் செய்து புறப்பட்டோம். - நான் அதற்குமுன் இரண்டொரு தடவை சென்னைக்குச் சென்றிருக்கிறேன். என்றாலும் அப்போதெல்லாம் என் தாயாருடன் அடக்க ஒடுக்கமாகவே சென்று வந்திருக்கிறேன். ஆகவே. இப்போது மற்றைய மாணவர்களுடன் புறப்பட்டுச் சென்றது ஒரு தனி மகிழ்ச்சிதானே யாகும். வாலாஜாபாத் புகைவண்டி நிலையத்தில் இருந்து சென்னை செல்ல மூன்று மணி நேரங்கள் சென்றன. காங்கிரஸ் மாநாட்டைக் குறித்துப் பல தனி வண்டிகள்கூட இருந்தனவென்று நினைக்கிறேன். எழும்பூர் ஏரிதான் அன்று காங்கிரஸ் நடந்த இடம். இன்று அங்கே ஏரி எண்ணும்படி ஒன்றும் இல்லை. சென்னை நகரமே பல ஏரிகள் சேர்ந்ததுதான் போலும். இன்றும் தியாகராய நகர், நுங்கம்பாக்கம் முதலியன ஏரியில் இருப்பதைக் காணலாம். எழும்பூர் ஏரியும் அப்போது பரந்த நிலப்பரப்பை உடையதாக இருந்தது. இன்று அங்கே எத்தனையோ பெரு மாளிகை களும், சிறு வீடுகளும், குடிசைகளும் உண்டாயிருக்கின்றன. ஆனால் அன்று அந்த நிலையிலில்லை; மின்சார இரெயிலும் கிடையாது. ஏரியின் நடுவில் இருப்புப் பாதை சென்றது. ஒருபக்கம் மாநாட்டுப் பந்தலும், மற்றொரு பக்கம் பலர் தங்க அறைகளும் அமைக்கப் பெற்றிருந்தன. அதற்கெனத் தனி இரெயில்வே நிலையம் முதலியனவும் இருந்தன. நாங்கள் அந்த மாநாட்டுப் பந்தலில் நடிக்க வேண்டும் என்று சொல்லித்தான் அப்பா மாசிலாமணி முதலியார் எங்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்றார்.