பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 273 பதற்குள், இறையருளில் அவர் ஒன்றிய நிலையினை நாடே போற்றிப் பரவிற்று. காஞ்சியில் மட்டுமன்றி வெளியூர்களில் நடக்கும் பல விழாக்களின் சார்பான சொற்பொழிவுகட்கும் நான் சென்று வந்தேன். அப்போது செய்யாறு என வழங்கும் திருவோத் தூரில் அவ்வை. துரைசாமிப் பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். என்னை அவர் தம்பி எனவே கொண்டு போற்றுவர். அவ்வூர் விழாப் பேச்சுக்களில் என்னைக் கேட்காமலே நாளும் பொருளும் குறித்து அனுப்பிவிடுவர். மாலை பள்ளிவிட்டுச் சென்றால் மறுநாள் பள்ளிக்குத் திரும்பிவிடலாம். எனவே நானும் மறுக்காது அவர் கட்டளையை ஏற்றுப் பணி செய்வேன். அவ்வாறே ஒரு முறை வட ஆர்க்காடு மாவட்டத் தமிழாசிரி யர் மாநாட்டை ஆரணியில் கூட்டி அதற்கு என்னைத் தலைமை தாங்க வைத்தார்கள். இவ்வாறே வேறு பல அன்பர்கள்-திருச்செந்தூர் தொடங்கிச் சென்னை வரையில் பலப்பல சமயச் சொற்பொழிவுகள் ஆற்ற அழைப்பார்கள். நானும் எதையும் தட்டாமல் ஏற்று என்னாலான பணிகளைச் செய்து வந்தேன். ஒய்வு நேரங்களில் காளப்பருடன் இருந்து, அவரை இனிய தேவாரத் திருவாசகப் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வேன். சில நாட்களில் இரவெலாம் பாட்டொலி கேட்டுக் கொண்டிருக்கும். அந்தச் சமய அடிப்படையிலேதான் என் வாழ்க்கையே அமைந்தது. ஆம் நான் நம்பிக்கை அடிப்படையிலேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். நம்பினார் கெடுவதில்லை நாலு மறை தீர்ப்பு என்ற பாரதியார் வாக்கை முழுதும் நம்பினேன். இன்றும் நம்புகிறேன். அந்நம்பிக்கை வீண் போவதில்லை. ஆ-18