பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 289 பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய எழுத்தினை அப்படியே விட்டு விடுதலே சரி என்ற எண்ணத்தில் மாற்றம் ஒன்றும் செய்யாமலேயே விட்டுவிட்டேன். இந்த நூலை எழுதிய காலத்துக்கும் இதில் காணப் பெறும் காஞ்சி வாழ்வின் காலத்துக்கும், இடையில் கால் நூற்றாண்டு கழிந்தது. அதற்கிடையில் எத்தனையோ மாறு பாடுகள் உண்டாகி விட்டன. அப்படியே இந்த நூல் எழுதிய அன்றைக்கும் இன்றைக்கும்-சுமார் பத்து ஆண்டுகள் இடை வெளியில்-எத்தனையோ மாறுபாடுகள் உண்டாகியுள்ளன. மக்கள் வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தரம்-அரசியல் நெறி பிறவகைகள் அனைத்திலும் எத்தனையோ மாறுபாடுகள் உண்டாகியுள்ளன. இந்நூலில் வாழ்ந்தவர்களாகக் குறிக்கப் பெற்றுள்ள சிலர் இன்று மறைந்துவிட்டனர், முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர் என் முன்னவள், திரு. காளப்பர். ஆத்மானந்த அடிகளார் போன்றவர்கள். எனவே நூலில் அவர்கள் வாழ்ந்ததாகக் காட்டும் நிகழ்ச்சிகள் பல அவர்தம் கடந்தகால நிகழ்ச்சிகளாக அமைந்துவிட்டன என்பதை இங்கே குறிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இந்த நூலின் வழியே என் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் காட்டினேன் என்றாலும், இதனால் யாருக்கும் பயனோ பிறவோ விளையும் என்று நான் கருதவில்லை. பல பேரறிஞர் தம் வாழ்க்கை வரலாறுகள் வையத்தில் உலவுகின்றன. தமிழகத்திலும் திரு. வி. க. போன்ற பேரறிஞர்கள் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் மக்கள் வாழ்வின் வழிகாட்டிகளாய் கலங்கரை விளக்கங்களாக நின்று நன்கு நிலவும் என்பது உண்மை. அத்தகைய ஒன்று இது அன்று. ஏதோ நான் என் வாழ்வில் பெற்ற அனுபவங்களை எழுதவேண்டும் என்ற ஆசை தூண்டிய காரணத்தாலே இதை எழுதினேன். என் ஆ-19