பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 34.7 மறுநாள் கூட்டம். அன்று காலையிலேயும் கங்கை நீராட்ட்ம், கடவுள் வழிபாடு. பின் சற்றே தொலைவிலுள்ள இந்துப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றோம். தில்லியிலிருந்து ஆறுமுகமும் வந்து விட்டார். கூட்டம் 10 மணிக்கு; 12க்கு முடிந்தது. அந்தப் பரந்த பல்கலைக்கழக இடத்தைச் சுற்றி வரவே இயலாது. மாளவியாவின் பரந்த மனம் போல அது சிறந்து நின்றது. எண்ணற்ற கட்டடங்கள். எங்கும் கலை மணம். திரு. சிவராமன் அவர்கள் அங்குள்ள ஆசிரியர் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். அன்று அவர்கள் வீட்டில் விருந்து. பல்கலைக்கழகப் பல பிரிவுகளையும் சுற்றிப் பார்த்து மாலை 5 மணிக்குத் திரும்பினோம். மறுபடியும் கங்கை நீராடி காசி விஸ்வநாதரையும் அன்னை அன்னபூர்ணியையும் தரிசனம் செய்தோம். நானே தொட்டு, நீரிட்டு, பூவிட்டுத் தமிழில் பாடி விசுவநாதரைக் கும்பிட்டேன். சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழொடு இசை பாடல் மறந்தறியேன் என்ற அப்பர் அடிகள் என் நினைவுக்கு வந்தன. ஆம்! அந்தக் காலத்தில் ஏழாம் நூற்றாண்டில்-தமிழ்நாட்டுக் கோயில்கள் அனைத்தும் காசிவிசுவநாதர் கோயிலைப் போன்றே யாரும் தொட்டு, நீராட்டி, பூவிட்டு, பாடிப் பரவும் வகையில் அமைந்திருந்தன. பின் ஏழு மணிக்கு மறுபடி மணிகர்னிகா போன்ற இடங்களையும் பிறவற்றையும் கண்டு கொண்டு கேதாரஈச்சுவரரை வணங்கினோம். மறுநாள் காலையிலேயே ஆறுமுகம் தில்லிக்குப் புறப்பட்டார். எனக்குப் பதினொரு மணிக்குத்தான் வண்டி, வந்தவழியே திரும்ப வேண்டும். காலையில் கடைத் தெருவனைத்தையும் சுற்றிப் பார்த்தேன். விடியலில் மறுபடியும்-மூன்றாம் முறை கங்கையில் மூழ்கி நலம் பெற்றேன். பின் உணவு உண்டு, திரு சித்தலிங்கையா வுடன் ரயிலடிக்கு வந்து, அவர் வழியனுப்பப் புறப்பட்டு, சென்ற வழியே திரும்பி ஐதராபாத் வந்து சேர்ந்தேன். அவ்வாறே மறுஆண்டும் என் பயணம் அமைந்தது. அப்போது சென்னையிலிருந்து சென்று வந்தேன்.