பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஆனந்த முதல் ஆனந்த வரை அவர் ஒன்றுமே உண்ணவில்லை. நானும் அன்றைப் பொழுது வீட்டில் இருந்து மறுநாள் காலை வாலாஜாபாத் பள்ளிக்கூடம் சென்றுவிட்டேன். பிறகு அந்த இளமைப் பருவத்தில் மற்றவர்களோடு விளையாட்டும் வேடிக்கையுமே கூடியதால் அப்பாவின் உடல்நிலையைப் பற்றி அதிகமாக நினைக்கவே இல்லை. நான்கைந்து நாட்கள் கழித்து ஊரில் இருந்து ஆள் வந்தது. அப்பாவுக்கு உடல்நிலை மிகக் கெட்டு விட்டதாகவும் நான் உடனே புறப்பட்டு வரவேண்டும் என்றும் சொன்னார்கள். நான் அப்போதும் அதிகமாகக் கவலையுறவில்லை. ஏதோ புறப்பட்டுச் சென்றேன். வீட்டில் பல உறவினர்கள் சுற்றி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சில மணி நேரம் சென்றது. இரவும் வந்தது. நான் உண்டு உறங்கி விட்டேன். விடியற்காலையில் தந்தையார் ஆவி பிரிந்தது. அனைவரும் ஓ'வென அலறினர். நானும் நைந்தேன். - கணவனை இழந்த பெண்களின் கைம்மைக் கோலத்தை நான் அந்த இளமையிலேயே கண்டிருக்கிறேன். எனவே என் அன்னை இனி எந்தக் கோலத்தில் தோற்றமளிப்பார் என்று நினைத்தபோது உள்ளமே தடுமாறிற்று. என்றாலும் நான் அதிகமாக வெளியில் ஒன்றும் புலம்பிக் கொண்டிருக்கவில்லை என் நினைக்கிறேன். இளமையில் அத்தனின் பிரிவு அதிக மாகத் தெரியவில்லைபோலும். சடங்குகள் முறைப்படி நடை பெற்றன. தந்தையின் ஈமச் சடங்கும் பால் தெளியும் நடை பெற்றன. அன்று நான் அதிகமாகத் துன்பமுறவில்லை. ஆனால் நான் என் தந்தைக்கு ஈமக்கடன் செய்த அதே வயதில் - பதின்மூன்றில் - என் மகன் தன் தாய்க்கு...என் மனைவிக்கு - ஈமக் கடன் செய்ய நேர்ந்த அந்த நாளில் நான் மிக மிகக் கசிந்து வாடினேன்; வருந்தினேன். தந்தையார் சடங்கு முடிந்ததும் நான் அதிகமாக ஒன்றும் கவலையுறவில்லை. பால் நடந்த அன்றைய பிற்பகல் நான்