பக்கம்:ஆப்பிள் பசி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலகம் சூடு பிடித்து சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்த கட்டத்தில் திடீரென்று வானம் பொத்துக் கொண்டது போல் பேய்மழை கொட்டத் தொடங்கியது. கனத்த மழைத் துளிகள் தடதடவென தகரக் கொட்டகை மீது விழும் சத்தத்தில் நாடக பாத்திரங்களின் பேச்சு அமுங்கிப் போகவே, தரை மகா ஜனங்கள் விசில் அடித்து கலாட்டா செய்தனர். "பணம் வாபஸ் கொடு" என்று சில குரல்கள். "ஆட்ட கால சட்டத்தை அனுசரிப்பதே முறை" என்று பதிலுக்குச் சில குரல்கள். தொடர்ந்து பெய்த மழை காரணமாகக் கொட்டகையின் கூரை ஒழுகத் தொடங்கி, அடுத்த சில நிமிடங்களுக்குள் கீழே வெள்ளம் புரளவே எல்லோரும் அவசரம் அவசரமாக எழுந்து வெளியே ஓடத் தொடங்கினர்.

பாப்பாவும் குமாரசாமியும் மழைக்கு அஞ்சி வாசல் படிக்கட்டில் நின்றனர்.

குமாரசாமி தான் வைத்திருந்த ஈச்சங்குடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, "நீ இங்கே நில்லு பாப்பா. நான் போய் வண்டி கொண்டாரேன்" என்று வேகமாக நடந்தான்.

நாடகத்துக்கு வந்த கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. இதற்குள் அரிதாரத்தை அழித்துக் கொண்டு முகத்தைத் துடைத்தபடியே வெளியே வந்து நின்றான் சாமண்ணா. படியில் நின்று கொண்டிருந்த. பாப்பா தன் தந்தை சென்ற திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று தத்திக் குதித்த தவளை ஒன்று அவள் பாதத்தில் பட்டு சில்லென்று உறைக்கவே, பயந்து போய் 'ஆத்தாடி!' என்று அலறிக் கொண்டே பின்பக்கம் சாய்ந்தாள். படிக்கட்டில் தவறி விழப் போன அவளை சாமண்ணா சட்டென்று தன் கைகளால் தாங்கிக் கொண்டு, "தவளைக்கா இப்படிப் பயந்துட்டீங்க?" என்று சிரித்தான். பாப்பாவுக்கு நெஞ்சம் படபடத்தது. வெட்கத்தில் முகம் சிவந்தவளாய், "மன்னிச்சுருங்க" என்று கூறி விலகிக் கொண்டாள்.

"பரவாயில்லை. ஆனால் பாவம்! தவளைதான் ரொம்பப் பயந்துருச்சு!" என்று ஜோக்கடித்தான் சாமண்ணா. பாப்பாவுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. நாணத்தோடு அவன் முகத்தைப் பார்த்தாள்.

'இந்த அழகு முகமா இத்தனை கோணங்கி செய்யுது!' என்று எண்ணிக் கொண்டாள்.

"நீங்க முன் வரிசையில்தானே உட்கார்ந்திருந்தீங்க? கூட உட்கார்ந்திருந்தவர் யாரு? உங்க அப்பாவா?"

"ஆமாம்; அதோ! வண்டி கொண்டாரப் போயிருக்கார். இப்ப வந்துருவார்."

"சாரல் அடிக்குது, இப்படித் தள்ளி வந்து நில்லுங்க."

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/12&oldid=1027780" இலிருந்து மீள்விக்கப்பட்டது