பக்கம்:ஆப்பிள் பசி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"உங்க நடிப்பும் பேச்சும் ரொம்ப தமாஷாயிருந்தது. பாழாப் போன இந்த மழை வந்து கெடுத்துட்டுது" என்று சொல்ல நினைத்தாள். ஆனால் பேச்சு வரவில்லை.

"எந்த ஊரு?"

"பூவேலி."

"இப்ப கிராமத்துக்கா போறீங்க?"

"இல்லை. ராத்திரிக்கு எங்கயாவது லாட்ஜில் தங்கிட்டு காலம்பற கிராமத்துக்குப் போலாம்னு பாக்கறோம்."

"மணி பன்னிரண்டு ஆகப் போகுது. மழை வேறே. லாட்ஜில் இந்த நேரத்துல எங்க இடம் கிடைக்கப் போகுது? திருவிழாவாச்சே! உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா ராத்திரி என் வீட்டிலேயே தங்கிட்டுப் போகலாம்" என்று அழைத்தான் சாமண்ணா.

"அப்பாவைக் கேளுங்க."

குமாரசாமி வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய போது பாப்பாவும் சாமண்ணாவும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, "அடடே.. நீங்களா! ரொம்ப சிரிப்பா நடிக்கிறீங்களே!" என்றான்.

"அப்பா! நம்மை இவர் வீட்டுக்குக் கூப்பிடறாரு. லாட்ஜிலே இடம் கிடைக்காதாம். ராத்திரி தங்கிட்டுப் போகலாம்னு சொல்றாரு..."

"தம்பிக்கு எதுக்கு சிரமம்?"

"சிரமம் ஒண்ணும் இல்லீங்க...?"

"நீ என்னம்மா சொல்றே?"

பாப்பா பேசாமலிருந்தாள். அதில் அவள் சம்மதம் தெரிந்தது.

"சரி, தம்பி! உங்களுக்குத் தொந்தரவு இல்லேன்னா வாரோம். ஏறிக்குங்க" என்றான்.

சாமண்ணா முன்பக்கமாவே வண்டிக்குள் புகுந்து குமாரசாமி பக்கத்தில் உட்கார, பாப்பா பின்பக்கமாய் முனையிலேயே உட்கார்ந்து அடைப்புக் கம்பியைச் செருகிக் கொண்டாள்.

"எப்படிப் போகணும் தம்பி? வழி சொல்லுங்க!"

"தெற்கால திருப்பி ஓட்டுங்க. அதோ தெரியுது பாருங்க ஒரு லாட்ஜ், அதுக்குப் பின் சந்து தான். அங்கே ஒரு சின்ன மாடி வீடு தெரியும். அதுதான் என் வீடு."

"மாடி மேலே யாராச்சும் லேடி இருக்காங்களா?" என்று கண் சிமிட்டினான் குமாரசாமி.

"யாரும் இல்லீங்க, நான் ஒண்டிக் கட்டைதான். என் அப்பா அம்மா சின்ன வயசிலேயே காலமாயிட்டாங்க. அதிகம் படிக்கல. கூத்தாடியாயிட்டேன்."

"அப்படிச் சொல்லாதீங்க. கலைஞனாயிட்டேன்னு சொல்லுங்க."

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/13&oldid=1027731" இலிருந்து மீள்விக்கப்பட்டது