பக்கம்:ஆப்பிள் பசி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இந்தாங்க காப்பி. இதைக் குடிங்க. தலைவலி பறந்துரும்” என்றாள் பாப்பா.

“பல் விளக்கலையே...” என்று இழுத்தான் சர்மண்ணா.

“யானை பல்லா விளக்குது?” என்று குமாரசாமி கேட்க, சாமண்ணா சிரித்துக் கொண்டே காப்பியை வாங்கிக் குடித்தான். தன்னுடைய அத்து மீறிய செயலுக்காகப் பாப்பா தன் மீது கோபப்படவில்லை. அப்பாவிடமும் அது பற்றிச் சொல்லவில்லை என்று எண்ணும்போது அவனுக்கு வியப்பாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

காப்பியைக் குடித்து முடித்ததும் அவன் உடம்பெல்லாம் ஒரு முறை குப்பென்று வியர்த்துக் கொட்டியது.

“ஜூரம் விட்டுப் போச்சு போல இருக்கு” என்று சிரித்தாள் பாப்பா.

“தம்பி, அப்பநேரமாகுது. மழைக்கு முன்னே நாங்க புறப்படறோம். உடம்பைப் பார்த்துக்குங்க. பூவேலிக்கு ஒரு முறை வந்துட்டுப் போங்க...” என்றான் குமாரசாமி.

அந்த நேரம் ‘சாமண்ணா’ என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டு, “யார் பாருங்க, காதர் பாட்சா மாதிரி தெரியுது” என்றான் சாமண்ணா.

காதர் பாட்சாவேதான்!

“தம்பி! இன்னும் கொஞ்ச நாளைக்கு நாடகம் கிடையாதாம்” என்று சொல்லிக் கொண்டே வந்தார் காதர்.

“ஏனாம்?”

“இந்த மழை அடியோட நின்னப்புறம்தான் மறுபடி நாடகமாம். லெட்டர் போட்டப்புறம் வந்தாப் போதுமாம். நம்மையெல்லாம் அவங்கவங்க ஊருக்குப் போகச் சொல்லிட்டார் காண்ட்ராக்டர். எல்லாருக்கும் சம்பளம் பட்டுவாடா பண்ணிக்கிட்டிருக்காரு. நீயும் போய் வாங்கிக்க!” என்றார் காதர்.

“என்ன சொல்றே காதர் நீ? சம்பளத்தை வாங்கிக்கிட்டு நான் எங்கே போவேன்? எனக்கு ஊரார், உறவினர் யாரும் கிடையாதே!” என்று பாப்பாவைப் பரிதாபமாய்ப் பார்த்தான் சர்மண்ணா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/22&oldid=1029338" இலிருந்து மீள்விக்கப்பட்டது