பக்கம்:ஆப்பிள் பசி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுப்பிவிட்டு, காண்ட்ராக்டர் வருகைக்காகக் காத்திருந்து சம்பளத்தை எண்ணி வாங்கிக் கொண்டபோது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது. நோட்டும் சில்லறையுமாகக் கிடைத்த இருபத்தேழு ரூபாயில் புருஷோத்தமன் ஷாப்பில் ஒரு சோப்பும் மூலைக் கதர்க் கடையில் ஒரு ரெடிமேட் சட்டையும் வாங்கிக் கொண்டான். வாடகை சைக்கிள் பிடித்து லாட்ஜுக்கே திரும்பிப் போய் இன்னொரு காப்பி சாப்பிட்டான்.

ஓட்டல்! முதலாளி சுதேசமித்திரனில்‘'மிராசுதார் துயர’த்தில் மூழ்கியிருந்தார். சாமண்ணவைக் கண்டதும் “வா சாமண்ணா! ராத்திரி அவங்க உன்னோடதான் தங்கியிருந்தாங்களா?” என்று விசாரித்தார்.

“ஆமாம்.”

“உனக்கு அவங்களை ரொம்ப நாளாத் தெரியுமோ?”

“ஊஹும். நேத்துதான்; டிராமாவுக்கு வந்தப்பதான் ....”

“அந்தப் பெண்ணை நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனா எங்கேன்னு தெரியல்ல. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. தாசி அபரஞ்சி முகம் அப்படியே உரிச்சு வச்சிருக்கு. அவள் மகளாய்த்தான் இருக்கணும்! அந்தக் காலத்திலே அபரஞ்சி அழகிலே மயங்காதவங்க கிடையாது ....” என்றார்.

சாமண்ணாவுக்கு இது! அதிர்ச்சியைத் தந்தது. ‘அபாண்டமாயிருக்குமோ?’ ஆனாலும் உணர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அப்படியெல்லாம் இருக்காது .....” என்றான்.

“நீ அவளைக் கல்யாணம் செய்துக்கப் போறதாக் கேள்விப் பட்டேனே!” என்று கேலியாகச் சிரித்தார்.

“யார் சொன்னாங்க?”

சிரித்தார். “எனக்கு அப்பப்ப எல்லா நியூஸும் வந்துடும் சாமண்ணா! காலையில காதர் பாட்சா வீட்டுக்கு வந்திருந்தான்.”

“நினைச்சேன். அவனுக்கு மண்டை வெடிச்சுடுமே. அவன் வெச்ச வத்திதானா இது? நான் அவளைத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்.”

“ஏண்டா இதுக்குத்தான் உனக்கு இலவசமா வீடு கொடுத்து வைச்சிருக்கனா? பாவம். ஏழைப் பையனாச்சே, பிராமணப் பிள்ளையாயிருக்கியே, எதிர்காலத்துலே எனக்கும் ஒத்தாசையாயிருப்பியே என்று என் மகளை உனக்குக் கொடுத்து உன்னை வீட்டோடு மாப்பிள்ளையா வச்சுக்கலாம்னு நினைச்சேன். நீ என்னடான்னா அந்தத் தேவடியாச் சிறுக்கியை..!!”

“என்ன சொன்னீங்க? நாக்கை அடக்கிப் பேசுங்க.“

“தேவடியாச் சிறுக்கின்னு சொன்னேன். கூத்தாடிப் பயலுக்கு வேற எந்தப் பெண் கிடைப்பாள்....?” கேலியாக எக்காளமிட்டார்.

சாமண்ணாவுக்கு ரோசம் பொத்துக் கொண்டது. ஆவேசத்-

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/25&oldid=1029129" இலிருந்து மீள்விக்கப்பட்டது