பக்கம்:ஆப்பிள் பசி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இடிந்து மண்மேடிட்டுப் போயிருந்த பெருமாள் கோயிலுக்கு சாட்சியாக கருடகம்பம் மெளனமா நிற்க, அரச மரத்தின் சலசலப்போடு கிராமத்துச் சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சைக்கிளை நிறுத்திக் கீழே இறங்கினான் சாமண்ணா.

அந்தச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, “தம்பி! குமாரசாமி வீடு எங்கே இருக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

“பாப்பா வீடா? அதோ ஒத்தை வண்டி தெரியுது பாருங்க, அதான்” என்று கைகாட்டினான் ஒரு பையன்.

உள்குரல்: “ஆறு மாதங்களுக்குப் பின் சற்றும் எதிர்பாராமல் தன்னைப் பார்க்கும்போது பாப்பா என்ன நினைப்பாள்? என்னைச் சரியான முறையில் வரவேற்பாளா? ஒருவேளை அடியோடு மறந்து போயிருப்பாளா?”

சைக்கிளைத் திண்ணை ஓரமாக நிறுத்தினான்.

வாழைப் பூ வடிவத்தில் விட்டத்தில் தொங்கிய நெற்கதிர்களைச் சுற்றிக் குருவிகள் லூட்டி அடித்துக் கொண்டிருந்தன.

ஜூலை மாதத்து வெயில் முதுகைப் பிளந்தது. உள்ளே முற்றத்து வெயிலில் தாம்பாளம் நிறையக் கீரை விதைகள் கறுப்பாக உலர்ந்து கொண்டிருந்தன.

சாமண்ணா தயக்கத்தோடு எட்டிப் பார்த்தான். பாப்பாவும் அவள் சிநேகிதி அலமேலுவும் தாழ்வாரத்தில் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/30&oldid=1029342" இலிருந்து மீள்விக்கப்பட்டது