பக்கம்:ஆப்பிள் பசி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் பேர்ல வருத்தப்படாதே'ன்னு சொல்லிட்டார். ஏன் அப்படிச் சொல்றீங்கன்னு கேட்டேன்.

‘ரொம்ப நஷ்டமாயிட்டுது . ஓட்டல்காரர்தான் கடன் கொடுத்து கை தூக்கிவிட்டார். கடன் தொடுக்கறப்பவே, சாமண்ணா திரும்பி வந்து வேலை கேட்டா, வேலை தரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி வச்சிருக்கார். கம்பெனியே இப்ப அவர் பேர்லதான் நடக்குது. ஓட்டல்காரருக்குச் சொந்தம் மாதிரிதான்' என்றார்.

அங்கிருந்து நேரா ஓட்டலுக்குப் போனேன். என்னைக் கண்டதும் அந்த அயோக்கியன் பதறிப் போனான். திரு திருன்னு முழிச்சான். வேகமாகப் போய் அவன் சட்டையைப் பிடிச்சு இழுத்து தரதரன்னு நடு ரோட்ல கொண்டு வந்து நிறுத்தி, ‘ஏண்டா கலப்பட எண்ணெய்! என் மேலே பொய்க் கேஸ் போட்டு என்னை ஜெயிலுக்கு அனுப்பிச்சதுமில்லாம திரும்பி வந்தா வேலை தரக்கூடாதுன்னு வேறே காண்ட்ராக்டர்கிட்டே சொல்லி வச்சிருக்கியாமே!’ என்று அவன் மென்னியை இறுக்கப் பிடிச்சேன்.

‘ஐயோ, ஐயோ என்னைக் கொல்றானே! எல்லாரும் இப்படி வேடிக்கை பார்த்துட்டு நிக்கறீங்களே!’ என்று கூப்பாடு போட்டான்.

‘சத்தம் போட்டே, கொலையே விழும். ஜாக்கிரதை’ன்னு தொந்தியிலே ஓங்கி ஒரு குத்துவிட்டேன். அம்மாடின்னு அப்படியே விழுந்துட்டான். இதுக்குள்ளே கூட்டமான கூட்டம் கூடிட்டுது.

விட்டுருங்க பாவம், விட்டுருங்கன்னு. என்னைப் பிடிச்சு இழுத்து, அழைச்சிட்டுப் போயிட்டாங்க. அப்பவும் நான் சும்மா இல்லே, தெருப்புழுதியை வாரி அவன் மேலே வீசினேன்.

‘டேய், மோசக்காரா! பொய்க் கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பினே இல்லே என்னை! இரு, இரு! இன்னும் கொஞ்ச நாளில் இதே ஊர்ல நானே சொந்தமா நாடகக் கம்பெனி ஆரம்பிச்சு உன் கம்பெனியை க்ளோஸ் பண்றனா இல்லையா பார். அது மட்டும் இல்லே. உன்னையும் நடுத்தெருவிலே நிக்க வைக்கலே என் பேர் சாமண்ணா இல்லே’ன்னு நாலு பேர் முன்னால் சத்தியம் செஞ்சுட்டு வந்திருக்கேன். என் ரத்தம் கொதிச்சுப் போச்சு. உன்னைப் பார்த்து தாசிமகள்னு சொன்னவன் நாக்கை அறுத்து எறிய வேணாம் ஆமாம், என் சபதத்தை நிறைவேத்தினப்புறம்தான் உன் கழுத்திலே தாலி கட்டப் போறேன். அதைச் சொல்லிட்டுப் போகத்தான் இப்ப வந்திருக்கேன்.

பாப்பா பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/34&oldid=1029157" இலிருந்து மீள்விக்கப்பட்டது