பக்கம்:ஆப்பிள் பசி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“உன் பேரு என்ன சொன்னே?”

“சாமண்ணா!”

“தகப்பனார் பேர்?”

“கைலாசம் அய்யர், காலமாகிவிட்டார்.”

“'நீ என்ன செஞ்சிட்டிருக்கே?”

“சின்னையா கம்பெனில நான் ஒரு நடிகன்.”

“ஓட்டல்காரரை எத்தனை நாளாத் தெரியும்?”

“ஒரு வருஷமாத் தெரியும். அடிக்கடி நாடகத்துக்கு வருவார். நானும் அவர் ஓட்டலுக்குப் போவேன். அங்கிருந்து வீட்டுக்கு அழைச்சிடட்டுப் போவார், ஸ்வீட் கொடுப்பார். அன்பாப் பழகுவார்...”

“அப்புறம் எப்படி ரப்சர்?”

“அவருக்கு ஒரு பெண் இருக்கா, அரைப் பைத்தியம். அதைக் கலியாணம் செஞ்சுக்கச் சொன்னார். நான் முடியாதுன்னேன். அதிலிருந்து ஆரம்பிச்சது தான்....”

“நீ குடியிருந்த மாடி வீட்டுச் சாவி அவர்கிட்டே எப்படிப் போச்சு?”

“அது அவருடைய வீடாச்சே! அவர்கிட்ட இன்னொரு சாவி இருந்திருக்கும்.”

“வாடகை கொடுக்காம பாக்கி வைச்சிருந்தியா?”

“வாடகையே வேணாம். சும்மா இருந்துக்கோன்னு பலமுறை சொல்லியிருக்கார்.....”

“அப்புறம் ஒருநாள் வாடகை. கேட்க வந்தப்பதான் கொலை செஞ்சயா?”

“நான் எதுக்கு அவரைக் கொல்லணும்?”

“இந்தாப்பா உண்மையைச் சொல்லிடு. இந்தப் போலீஸ் உத்தியோகத்துலே உன் மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன் தெரியுமா? 302 இந்த ஆளை அந்த ரூமுக்குக் கொண்டு போ! மயிலே, மயிலே இறகு போடுன்னா போடமாட்டார் போலிருக்கு...”

கான்ஸ்டபிள் சாமண்ணாவை அந்த அறைக்குக் கொண்டு போனார். அந்த அறை ஒரு கிடங்கு போல் காற்று வசதி, வெளிச்சம் இல்லாமல் இருந்தது. இன்ஸ்பெக்டர் முனகாலா நுழைந்தார். சாமண்ணா அழுது கொண்டிருந்தான்.

“ஹீரோவாக இருந்து மேடையில் அழ வேண்டும் என்று நினைத்தேன். கோவலன் வேஷத்துல அழ வேண்டியவன் இப்படி கொலைக்களத்திலே...”

“உண்மையைச் சொல்லிடு. நாடகத்திலே நடிக்கிறதாச் சொல்றே? என்ன வேஷம் போடுவே?”

“அரிச்சந்திரன், கோவலன், நல்லதங்காள்? இப்படி எல்லா நாடகத்துலேயும் சின்னச் சின்ன வேஷம்...”

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/52&oldid=1029351" இலிருந்து மீள்விக்கப்பட்டது