பக்கம்:ஆப்பிள் பசி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“சாமண்ணா தெரியுமோ உனக்கு?” என்று மனைவியிடம் கொஞ்சலாகக் கேட்டார் வரதாச்சாரி.

“கோமாளி சாமண்ணவா?” என்று மாமி கேட்ட போது அத்தனைப் பற்களும் பளீர் பளீர் என்று ஒளி வீசின.

“ஆமாம்! அவன் நாடகத்தில் வந்துட்டா வாயிலே ஈ பூந்தாக் கூடத் தெரியாம சிரிப்பியே...”

கோமளம் ஒரு தோளைக் குலுக்கிக் கன்னத்தில் இடித்துக் கொண்டாள்.

“அவன் தமாஷ் எனக்குப் பிடிக்கும்னா, நீங்க இப்படித்தான் கேலிபண்ணுவேள்! பக்த ராமதாஸிலே மிளகாப் பொடித் தமாஷ் பண்ணுவான் பாருங்கோ. சிரிச்சு வயிறு புண்ணாயிடும். காதர் பாச்சா ஆர்மோனியமும், சர்மண்ணா கோமாளித்தனமும் சேர்ந்துட்டா சொல்லவே வேணாம்.”

“உனக்கு சாமண்ணாவைப் பார்க்கணுமா?”

“ஏன்! நம்மாத்துக்கு வரப் போறானா?”

“மத்தியானமா வரச் சொல்லியிருக்கேன். பாவம், ஒரு கொலக் கேஸ்ல மாட்டிண்டிருக்கான். இன்னைக்கு அவனை ஜாமீன்ல மீட்டுண்டு வந்திருக்கேன்.”

கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்தார். அன்று நடந்தது பூராவையும் ரிப்போர்ட் செய்தார்.

“ஆமாம்! இந்தப் பிள்ளையாண்டான் (சாமண்ண) கொலை பண்ணியிருப்பான்னு நீங்க நம்பறேளா?”

“ஏண்டி, டிராமாக்காரனுக்கு என்ன புத்திடி வரும்? குடிப்பான். கூத்தி வச்சுப்பான். அப்புறம் ஒண்ணொண்ணா எல்லாம்தான் செய்வான்.”

“சர்மன்ணாவை அப்படிச் சொல்லாதீங்க! ‘மானீர்! கள்ளுக் குடியாதீர்!’னு ஒரு பாட்டுப் பாடுவானே நாடகத்துலே.”

“அது நாடகம்! அசல் வாழ்க்கையில் அப்படியே நடந்துப்பான்னு நம்பறியா?”

“எனக்கென்னவோ அவன் கொலையெல்லாம் செய்வான்னு தோணல்லே...”

“அவனை ஜாமீன்ல விடுதலை பண்ணிக் கொண்டு வரச் சொன்னது யார் தெரியுமோ? அதைக் கேட்கலையே நீ?”

“தெரியாதே, யாரு?”

“மேட்டுக்கடி மிராசுதார் சாம்பசிவ ஐயர் தெரியுமோ?”

“ஏன் தெரியாது! உங்க பெரிய தாத்தாவுக்கு நல்ல பழக்கம்னு சொல்வேளே!”

“அபரஞ்சின்னு ஒருத்தியை அவர் வச்சிண்டிருந்தார்.”

“ஓ! தஞ்சாவூர் நவராத்திரி தர்பார்லே ஆடுவாளாமே அவளா? ரொம்ப அழகா இருப்பாளாமே!”

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/56&oldid=1029467" இலிருந்து மீள்விக்கப்பட்டது