பக்கம்:ஆப்பிள் பசி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வச்சிருக்கா! அந்த வகையில் நானும் அவளோட சிநேகமாயிருக்கேன்.”

“அவ்வளவுதானே. ஒரு வேளை வேற சம்பந்தம் ஏதாவது உண்டோன்னு...”

“அப்படியெல்லாம் கிடையாது ஸார்!”

“அதானே கேட்டேன்” என்று சொல்லி வரதாச்சாரி இழுத்தார்.

“சொல்லப் போனா ஏதோ அபிமானத்துலதான் அவள் இந்த உதவியை எனக்குச் செய்திருக்கணும். அவளைப் பார்க்கவே எனக்கு வெட்கமாயிருக்கு. எனக்கு முழு விடுதலை வாங்கித் தந்துட்டீங்கன்னா ஊரை விட்டே போயிடுவேன். வேறு எங்கயாவது டிராமாக் கம்பெனிலே சேர்ந்துப்பேன்!”

“இரு! இரு! விசாரணை முடியட்டும். முதல்ல நீ கொலை செய்யலைன்னு நிரூபிச்சாகட்டும், அப்புறம்தான். மற்றதெல்லாம்” என்றார் வரதாச்சாரி.

சாமண்ணா மறுபடியும் வந்து பார்ப்பதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டான். எட்ட நின்றபடியே மாமிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, “காப்பி ரொம்ப நன்றாயிருந்தது மாமி!” காலையிலிருந்து தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இப்ப பட்டுனு நின்னுப் போச்சு” என்றான். மாமிக்குப் பரம சந்தோஷம்.


சாயங்காலம் பாப்பா வந்தபோது வரதாச்சாரி தமது அலுவலக அறையில் உட்கார்ந்திருந்தார்.

வாசலில் வண்டிச் சத்தம் கேட்டதும் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

பாப்பா ஒரு மின்னல் போலப் பின் படியில் இறங்கிக் . கொண்டிருந்தாள்.

மயில் நிறத்தில் புடைவை, மேலே இடது தோள் ஓரம் ப்ரூச் குத்தியிருந்தாள். இடுப்பை இறுக்கி ஒட்டியாணம்.

குமாரசாமி அவள் பின்னோடு வந்தான்.

அறைக்குள் வந்தபோது பரிமளம் வீசிற்று. நல்ல் நிலவில் சமைத்த முகம். இரு கண்ணும் மருட்சியாகப் பார்த்தபோது யெளவனம் அவளைக் கனவு சுந்தரியாகக் காட்டியது.

கண்களில் கவலை தெரிய, வந்ததும் வராததும், “சார், காரியம் வெற்றியா?” என்று வக்கீலைப் பார்த்துக் கேட்டாள்.

வரதாச்சாரி சிரித்தார். “கவலைப்படாதேம்மா! எல்லாம் சரியாப் போயிடுத்து. ஜாமீன்ல விட்டாச்சு! முனகாலா அவசரப்பட்டுக் கைது பண்ணிட்டார்! சாமண்ணாகிட்டே வலுவான அலிபை இருக்கு! அன்னி ராத்திரி பூரா உங்க ஊர்

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/61&oldid=1029573" இலிருந்து மீள்விக்கப்பட்டது