பக்கம்:ஆப்பிள் பசி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெருக்கூத்திலே இருந்திருக்கான். அந்த ஊரே கூடி வந்து சாட்சி சொல்லுமே, இது போதும் எனக்கு. இனிமே போலீஸ் அவன் மேல் கை வைக்க முடியாது. அது சரி; வாசனை ஜமாய்க்கிறதே. என்ன ஸெண்ட் அது? ஆட்டோ தில் பஹாரா?”

பாப்பா முகம் தாமரையாக மலர, “அவரை விட்டாச்சா? இப்ப எங்கே இருக்கார்?”

“எனக்குத் தெரியாது. அப்புறம் வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கான். எங்கே போவான்? டவுன்லதான் எங்கேயாவது இருப்பான்.”

“ஏதாவது சொன்னாரா?”

“அதிகமாப் பேசலே. அப்படியே நன்றிப் பெருக்கிலே நனைஞ்சு போய் நின்னான். தழதழத்துப் போயிட்டான்.”

“ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணினது யார்னு கேட்டாரா?”

“கேட்டான்!”

“என்ன சொன்னீங்க?”

“'உன் பேரைச் சொன்னேன்!”

“அப்ப என்ன சொன்னாரு?”

“'உன் பேரைச் சொன்னதும் முகமெல்லாம் பிரகாசமாச்சு!”

“அப்புறம்?”

“ரொம்ப ஒண்ணும் பேசலை. முகத்துல நன்றி தெரிஞ்சுது.”

“அப்புறம்?” வக்கீல் விழித்தார். பாப்பாவின் கேள்விகளில் அவளது தத்தளிப்பு தெரிந்தது.

“வேறே ஒண்ணுமே சொல்லலையா?”

“சொன்னான். மாமியைப் பார்த்து, ‘நீங்க கொடுத்த காப்பி நன்னாயிருந்தது'ன்னு சொல்லிட்டுப் போயிட்டான்.”

“என்னைப் பார்க்கணும்னு ஒரு வார்த்தை கூடச் சொல்லலையா?”

வக்கீல் சற்றுத் தவித்தார்.

“அதெல்லாம் அவர்கிட்ட சொல்வானா? ரொம்ப நல்ல பையன்! கட்டாயம் அவனே உன்னைத் தேடிண்டு வருவான் பாரு!” என்றாள் கோமளம் மாமி.

“மாமி, இவர் எப்ப வந்தார்? எவ்வளவு நேரம் இருந்தார்? நீங்க அவரோட பேசினீங்களா?”

“இதோ இந்த பெஞ்சு ஓரத்துலதான் உட்கார்ந்துண்டிருந்தான். அரை மணி நேரம் இருந்தான். காப்பி கொடுத்தேன்... சாப்பிட்டான்.”

அவசரமாக அந்த ஓரத்தை ஒரு பார்வை பார்த்துத் திரும்பினாள்.

“அவனுக்குப் பெரிய நிம்மதி. விடுதலை கிடைச்சுது கோடி சம்பத்து கிடைச்ச மாதிரி!”

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/63&oldid=1029574" இலிருந்து மீள்விக்கப்பட்டது