பக்கம்:ஆப்பிள் பசி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாரசாமி ஒரு கித்தான் பை கொண்டு வந்திருந்தான். அதிலிருந்து ஒரு வெள்ளித் தட்டையும் பழங்களையும் எடுத்தான்.

பாப்பா அதை வாங்கி நன்றிப் பெருக்கோடு வரதாச்சாரியிடம் கொடுத்து விட்டு நமஸ்காரம் செய்தாள்.

இ“தெல்லாம் எதுக்கம்மா?” என்று அவர் தயங்க, “இருக்கட்டும்! எனக்கு நீங்க பெரிய உதவி செஞ்சிருக்கீங்க! இது என் வாழ்க்கையிலே மறக்க முடியாத கட்டம்!” என்றாள் பாப்பா.

“வரட்டுங்களா?” என்று வக்கீலிடம் விடைபெற்றுக்கொண்டான் குமாரசாமி.

“சரி, அடுத்த வாரம் ஒரு நடை வந்துட்டுப் போங்க. வரச்சே, நல்ல முருங்கைக்காயா கிராமத்திலிருந்து கொண்டு வாங்க” என்றார் வரதாச்சாரி.

தந்தையும் மகளும் புறப்பட்டார்கள். குமாரசாமி போவதற்கு வழிவிட்டு, பாப்பா தயங்கினாள். சட்டென்று அந்த பெஞ்சு ஓரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அது, சீதை அனுமனிடமிருந்து கணையாழியை வாங்கி ஒற்றிக் கொண்ட மாதிரி இருந்தது.

தட்டைப் பார்த்துக் குனிந்திருந்த வரதாச்சாரி தலைதூக்க அந்தச் செய்கையை உடனே கவனித்து விட்டார்.

ஒருகணம் அவர் கண் பனித்தது.

குமாரசாமியும் பாப்பாவும் போனதும் வக்கீல் மாமி, “மூக்கும் முழியுமா தேச்சு வச்ச குத்து விளக்காட்டம் ரவி வர்மாப் படம் மாதிரி எத்தனை அழகா இருக்கா இந்தப் பெண்? சாமண்ணா கிட்ட. உயிரையே வெச்சிருக்காளே. அந்தப் பிள்ளையாண்டான் என்னடான்னா விட்டேத்தியா ஒட்டுதல் இல்லாம இருக்கான். அவன் வந்தா புத்தி சொல்லணும்...” என்றாள்.

“நீ கூடச் சின்ன வயசிலே இப்படித்தாண்டி இருந்தே!” என்று மனைவியின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினார் வக்கீல்.

ரு வாரம் வரை, சர்மண்ண மேக்-அப் மேன் வீட்டு மாடியில் தங்கி இருந்தான். வெளியில் எங்கும் போகவே இல்லை. துக்கமாக இருந்தது. நாடக வாழ்வு முடிந்தது போலத் தோன்றியது.

இனி கொலைக் கேஸ் முடிகிற வரை நாடகம் எங்கே நடக்கப் போகிறது?

வேறு ஊருக்குப் போய் விடலாமா? வேறு. கம்பெனி.. எங்கேயாவது பார்த்துச் சேரலாமா? எத்தனை நாள் இப்படி வேலை எதுவுமில்வாமல் வண்டியை ஓட்ட முடியும்?

வாசல் கதவை யாரோ தட்ட, சற்றுக் கலங்கிய கண்களுடன் சாமண்ணா எழுந்து போய்த் திறந்தான்.

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/64&oldid=1029576" இலிருந்து மீள்விக்கப்பட்டது