பக்கம்:ஆப்பிள் பசி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"சோடா" என்றாள் அப்பாவிடம். சற்றே தூரத்தில் அரச மரத்தடியில் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடப்பதைப் பார்த்த அவள், "அங்கே போய் வேடிக்கை பார்க்கலாமா?" என்பது போல் கண்களால் கேட்டாள்.

"அதுக்கெல்லாம் நேரமில்லே. இப்ப முதல்ல நகைக்கடைக்குப் போய் உன் அம்மாவின் வளையல், காசு மாலை, கம்மல் அத்தனையும் வித்து, காசாக்கிடணும். தங்கம் நல்ல விலை போகுதாம். அப்புறம் இந்த ஊர்ல நம்ம உறவுக்காரப் பையன் ஒருத்தன் எலக்ட்ரிக் ஆபீஸ்ல வேலை செய்யறானாம். உன் அழகுக்கு ஏத்த பையனாம். அம்மா சொல்லிட்டுப் போயிருக்கா, உன்னை அவனுக்குத்தான் கட்டிக் கொடுக்கணும்னு. அவன் விலாசம் கேட்டு வாங்கி வச்சிருக்கேன்."

"எனக்குக் கலியாணமும் வேணாம். ஒண்ணும் வேணாம்" என்றாள் பாப்பா.

"அப்படின்னா?"

"ராத்திரிக்கு டிராமா பார்க்கலாம்பா. வள்ளித் திருமணம்."

"முதல்லே வள்ளித் திருமணம். அப்புறம்தான் உன் திருமணங்கறயா? நல்ல பெண்ணம்மா நீ! வா. ஐயர் கடைக்குப் போய் ஏதாச்சும் சாப்பிடலாம்."

"எனக்குப் பசி இல்லை. கரும்புச் சாறும் மசால்வடையும் நெஞ்சைக் கரிக்குது .... நீங்க சாப்பிடுங்க."

இருவரும் ஐயர் கிளப்பை நோக்கிச் செல்லும்போது, "அரிக்கன் விளக்கு வாங்கணும்னு சொன்னீங்களே, அத பாருங்க, அந்தக் கடையிலே... என்றாள் பாப்பா.

வண்டியைத் தெரு ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் அரிக்கன் விளக்கு ஒன்றை விலை பேசி வாங்கி அதில் நாடா போட்டு, 'குரங்கு மார்க்' கெரஸினும் ஊற்றிக் கொண்டார்கள்.

பாண்டு வாத்தியம் இசைக்க, ஆகாச வேட்டுகள் முழங்க, தண்டமாலையும் தங்க ஆபரணங்களும் மத்தாப்பு வெளிச்சத்தில் தகதகக்க, ஊரே குதூகலத்தில் எக்களிக்க தைப்பூச உற்சவர் ஏக தடபுடலாய் வீதிவலம் போய்க் கொண்டிருந்தார்.

கூட்டம் அலைமோதிக் கொண்டு நகர்ந்தபோது, இளமையின் பூரிப்பில் பதினேழைக் கடந்து நின்ற பாப்பாவின் அழகை மத்தாப்பூ வெளிச்சத்தில் கண்டு மயங்கிய வாலிபர்கள் அவளையே கண்கொட்டாமல் பார்த்தார்கள்.

"பாப்பா, சாமி. பார்த்தது போதும், வா. இந்த ஆசாமிங்க கண்ணிலிருந்து தப்பிப் போயிரலாம்" என்று அழைத்தான் குமாரசாமி.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/7&oldid=1027716" இலிருந்து மீள்விக்கப்பட்டது