பக்கம்:ஆப்பிள் பசி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதே முறையில்தானே அவள் மனமும் பிரார்த்தனை செய்கிறது?

‘என் யெளவனத்தையும் வாழ்க்கையையும் யாரிடம் ஒப்படைக்கப் போகிறேன்?’ என்று மனத்துக்குள் கேட்டுக் கொன்டாள் பாப்பா.

‘சாமண்னை எப்போ வருவார்?’ அவள் நினைவெல்லாம், கவனமெல்லாம் சாமண்ணவின் மீதே இருந்தது.

சுப்பன், குப்பன் என்ற இரண்டு விதூஷகர்கள் இடையில் வந்து கொச்சை மொழியில் உரையாடித் தமாஷ் செய்துவிட்டுப் போனது அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

சாமண்ணா வந்திருந்தால் கொட்டகை அதிர்ந்திருக்குமே! அப்படி ஒரு நடை போட்டுக் காட்டுவாரே!

புது நாடக சபா தொடங்கி, புது நாடகம் உருவாக்கி இருக்கிறார்கள். நாடகம் வெற்றிகரமாக நடக்க வேண்டும். அப்போதுதான் நடிகர்கள் பிழைப்பார்கள்.

ஆமாம், சிங்காரப் பொட்டு நடத்த ஆரம்பித்துள்ள இந்த நாடக கோஷ்டியில் சாமண்ணா இருக்கிறாரா, இல்லையா?

நிச்சயம் இருக்க வேண்டுமே! சாமண்ணா புது வேடம் போடப் போவதாகச் சொன்னார்களே! எந்த வேடத்தில் வருவாரோ?

இடைவேளை வந்தது. ஆனால் சாமண்ணவைத்தான் காணவில்லை: பாப்பா குழம்பிப் போனாள்.

வக்கீல் வரதாச்சாரி வெளியில் எழுந்து போனபோது முன் வரிசையில் இருந்த கோமளம் பின்பக்கம் திரும்பிப் பாப்பாவுக்கு ஜாடை காட்டினாள்.

பாப்பா சுருக்கென்று எழுந்து தளிர்நடையாகக் கோமளத்தின் அருகில் போய் அமர்ந்தாள்.

“என்ன பாப்பா இவன்! ஏதாவது அக்கிரமம் பண்றானா? இன்னும் ஆசாமி வரவேயில்லையே! ஒருவேளை வராமலே இருந்து விடுவானோ?” என்று சாமண்ணவைக் குறித்துக் கவலைப்பட்டாள் கோமளம்.

“அதான் மாமி நானும் யோசிக்கிறேன். இந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்திருக்கிறாரா, இல்லையா என்றே சந்தேகமாயிருக்கிறதே! ஒருவேளை இந்த நாடகத்தில் அவருக்கு வேஷமே இல்லையோ, என்னவோ!” என்று தவித்தாள்.

“சேர்ந்திருக்கேன்னுதான் சொன்னான். பார்க்கலாம், இன்னும் பாதி இருக்கே!”

“மாமி! சிங்காரப் பொட்டு நல்லவர்தானே?”

“நல்லவனாத்தான் இருக்கணும்.”

“பணத்தை வாங்கி முழுங்கிட மாட்டானே?”

“முழுங்கின தொடர்ந்து மூணு வேளைச் சாப்பாடு கிடைக்க வேண்டாமோ? நாடகம் நடந்தாத்தானே கிடைக்கும்.”

“நீங்க கண்டிஷன் பேசிட்டுத்தானே பணம் கொடுத்திருக்கீங்க?”

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/79&oldid=1029635" இலிருந்து மீள்விக்கப்பட்டது