பக்கம்:ஆப்பிள் பசி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப்ராப்ளம் இல்லை. அடுத்த வாரத்திலேயே முடிச்சுடலாம்” என்றார்.

“சீக்கிரமாகவே அதைச் செய்திடுங்க; அப்பத்தான் பாப்பாவுக்கு நிம்மதி” என்று கூறிய குமாரசாமி வக்கீலிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டபோது பாப்பாவும் தயாராக எழுந்து நின்றாள்.

அவர்கள் இருவரும் வண்டி ஏறும்வரை கீழ்ப் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சாமண்ணா.

“சாமண்ணா! என்ன இது? ராத்திரி நாடகம் முடிஞ்சதுக்கப்புறம் நீ பாப்பாவை வந்து பார்க்கவே இல்லையாமே! அந்த டாக்டருடைய பெண் சகுந்தலாவைப் பார்த்து இளிச்சு இளிச்சு பேசிண்டிருந்தயாம். வழி அனுப்பி வைச்சா எல்லோரையும் சமமாப் பார்க்க வேண்டாமோ? நேற்று வந்த டாக்டர் பெண் அத்தனை ஒசத்தியாயிட்டாளா? ‘நான் இருக்கிறதே அவர் கண்ணில படலையா?’ என்று அழுது ஆத்திரப்பட்டாள், பாவம்! பாப்பா என்ன உசத்தி இல்லையோ? அவள் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமோ உனக்கு? நினைச்சா, இந்த ஊரையே வாங்கிடலாம்” என்றாள் கோமளம்.

“தெரியும் மாமி! பணம் இருக்கட்டும் மாமி, அதைக் காட்டிலும் அவளுடைய நல்ல குணம் இருக்கே, அது யாருக்கு வரும்? என் போதாத காலம், இப்படி நடந்து போச்சு. நான் வேணும்னு அப்படிச் செய்யலை. டாக்டர் வந்து விடாப்பிடியாப் பிடிச்சுண்டுட்டார். இல்லாட்டா'உங்களை, பாப்பாவை எல்லாரையுமே வழி அனுப்பி வச்சிருப்பேன்” என்று அழமாட்டாக் குறையாகச் சொன்னான் சாமண்ணா.

“அது போகட்டும். பாப்பா இப்ப இங்கே வந்திருந்தாளே, இப்பவாவது அவளோடு சரியாப் பேசியிருக்கலாமே!”

“பேசினேனே!”

“எங்கே பேசினே? நான் பாாததுண்டுதானே இருந்தேன்! நீயும் ஒரு நடிகனா இருக்கியே! நடிப்பிலேதான் உன் நேசம், பாசம் பால்லாத்தையும் காட்டுவியா?. நிஜ வாழ்க்கையில் மாட்டியா?”

”ஏன் மாமி அப்படிச் சொல்றீங்க?”

“அந்தப் பெண் உன் மேலே உசிரையே வச்சிருக்கு. நீயானா முன்பின் தெரியாத மாதிரி நடந்துக்கறே. அதுக்கு ஒரு வார்த்தை இதமாச் சொல்ல மாட்டேங்கறே?”

“அது பாசந்தானா?” என்று ஒரு கேள்வி கேட்டு சாமண்ணா நிறுத்தியதும் கோமளம் திகைத்துப் போனாள்.

“என் சாமண், அதையும் தாண்டி ஒரு படி மேலே போயிட்டாத்தான் என்ன? அதிலே என்ன தப்பு இருக்கு? நீ என்னவோ படிக்கல. உத்தியோக லைன்லே வரல்லை. கஷ்டத்திலே பிறந்து நாடகத்திலே சேர்ந்திருக்கே. நாடகம் உனக்கு நிரந்தரமா சோறு போடுங்கறது என்ன நிச்சயம்? உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்க வேணமா!”

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/91&oldid=1029675" இலிருந்து மீள்விக்கப்பட்டது