பக்கம்:ஆப்பிள் பசி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களையும் கவர்ந்துவிட்டது. எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு நாடகம் பார்க்க வந்தார்கள். மேல் தட்டு மக்கள் தினம் தினம் தொடர்ந்து வந்தார்கள்.

இருபத்தைந்து நாட்களாகத் தொடர்ந்து நாடகத்துக்கு வரும் பெரும் கூட்டத்தைக் கண்ட வக்கீல் வரதாச்சாரிக்கு ஒரு யோசனை தோன்றியது. சிங்காரப் பொட்டுவைக் கூப்பிட்டு, “இன்னொரு விழா எடுத்துடுவோம். பிரமாத விளம்பரம் கிடைக்கும். ஜனங்கள் ஒரே குஷியிலே இருக்காங்க” என்றார்.

ஏற்கெனவே நாடகத்தில் வரும் பாட்டுக்கள் சில பாமரர் வாயில் தவழ ஆரம்பித்து விட்டன.

“அடே துர்யோதனப் பாதகா! உன்னைத் துடைத்து எடுக்க என் புஜம் புடைத்து நிற்கிறது” என்ற சாமண்ணாவின் வீர கர்ஜனையைத் தெருச் சிறுவர்கள் அவ்வப்போது கூச்சலிட்டுக் காட்டினார்கள்.

‘இருபத்தைந்தாவது நாள்’ நாடக விழாவன்று பல பேர் டிக்கெட் கிடைக்காமல் வீடு திரும்ப வேண்டியதாயிற்று.

அன்று நாடகத்தில், இடைவேளை வந்தபோது மேடை மீது நாற்காலிகள் போட்டு ஊர்ப் பிரமுகர்களைக் கொண்டு போய் உட்கார வைத்தார்கள். வக்கீல்தான் விழாவை முன் நின்று நடத்தினார்.

சகுந்தலாவின் தந்தை டாக்டர் ராமமூர்த்தி எழுந்து வரவேற்புரை பேச ஆரம்பித்த போது ஏக ஆரவாரம்!.

“ஊரிலே வியாதி கூடக் குறைஞ்சுபோச்சு(சிரிப்பு)உண்மைதான் என்கிறேன். எனக்கு அது தெரிகிறது. காரணம் இந்த டிராமா! (கரகோஷம்), டிராமான்னா சிங்காரப் பொட்டுதான். சாமண்ணாதான்.” (ஒரே கரகோஷம்)

(சபையில் ஒருவர் ‘சாமண்ணா இரண்டு மடங்கு’ என்று கத்தினார். அதைத் தொடர்ந்து ஒரு பலத்த கரகோஷம்).

“அடேயப்பா! உங்கள் அபிமானம் இப்போதுதான் புரிகிறது. இத்தனை நாளும் சாமண்ணாவின் திறமையை அறிந்து கொள்ளாமல் அந்தப் பிறவி நடிகரை வெறும் கோமாளி ஆக்கி வைத்திருந்தோம். இப்போது அர்ச்சுனன் உயரத்துக்கு அவரைத் தூக்கியாச்சு. இன்னும் அவர் மேலே போய்....”

மேடை நிறைய மலர் மாலைகள் உதிர்ந்து கிடந்தன. பிரமுகர்களுக்கும் மாலை, நடிகர்களுக்கும் மாலை.

அடுத்தாற்போல் வக்கீல் வரதாச்சாரி எழுந்தார்.

“சகோதர சகோதரிகளே!

சாமண்ணா நடிப்பைப் பாராட்டி நாடக அபிமானி ஒருவர் இந்தச் சங்கிலியையும், மோதிரத்தையும் அவருக்குப் பரிசாக அளிக்கிறார். அந்த அபிமானி இந்த சபையில் உட்கார்ந்திருக்

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/97&oldid=1029725" இலிருந்து மீள்விக்கப்பட்டது