பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்ந்த பேதைமையை அறிகின்றார். அரசர்களையும் வள்ளல்களையும் பாடுவதுதான் புலவர் மரபா, கவி மரபா என்று எண்ணுகின்றார். கண்ணிற் காணும் தெய்வங்களை விட்டுக் கண்ணுக்கும் மனத்துக்கும் எட்டாத தெய்வங்களைத்தான் பாட வேண்டுமா என்று கருதுகின்றார். பழைய கவி மரபுடன் முரணிப் பாமரக் குடிமக்கள் மீது ஒரு காவியமே தொடுக்கின்றார். தன்னேரில்லாத் தலைவர் பெயரால் காப்பியம் பாடும் மரபிற்கு முரணி, ஒரு சிறிய சிலம்பின் பெயரால் காப்பியம் நாட்டுகின்றார். சிவனையோ திருமாலையோ அருகனையோ வணங்கிக் காவியம் தொடங்காமல் திங்களையும் ஞாயிற்றையும் மழையையும் புகாரையும் போற்றிக் காவியம் பாடுகின்றார். இங்ஙனம் மரபெனக் கருதும் பலவற்றையும் முரணித் தொடுக்கும் இளங்கோவடிகள் காப்பியத்தில் நாம் காணும் முரண் தொடைகள் பலப்பல. அவற்றுள் ஒன்று மட்டும் ஈண்டுக் காண்போம்.

முரண்பட்ட வாழ்க்கை நெறிகள்

முரண்பட்ட இருவகைக் குடும்ப நெறிகளைத் தம் காவியத்தின் கருப்பொருளாக அமைத்துக் கொள்கிறார் கவிஞர். ஒன்று குலமகளுடன் வாழும் ஒழுக்க நெறி, மற்றொன்று விலைமகளுடன் இன்பமுறும் இழுக்க நெறி. சங்க காலத்தில் நிலவிய அவ்விரு வகை நெறிகளும் இளங்கோ காலத்திலும் மாறவில்லை போலும். முன்னது பண்பட்ட காதல் வாழ்வு, பின்னது பண்பொழிந்த காம வாழ்வு. இவ்விரு நெறிகளையும் இவர் எதற்காகத் தம் காவியக் கருவாக்கினர் என்பது ஆராய் தற்குரியது. குலமகள் தனக்கென ஒரு தலைவனைப் பெற்று வாழ்கிறாள். விலைமகள் ஒரே தலைவனுடன் வாழவேண்டும் என்னும் நியதியில்லை. குலமகள் தன் கணவனை வசப்படுத்த முயல்வதில்லை. விலைமகள் எவனாவது செல்வன் ஒருவனைத் தன் வசப்படுத்தும் கலையில் வல்லவள். இஃது அக் கால மகளிர் சமுதாய நிலை. குலமகளாகக் கண்ணகியைப் படைத்துக் கொண்டார் இளங்கோ. விலை மகளாக மாதவியைப் படைத்துக் காட்டுகின்றார். கற்பு நெறியில் உயர்ந்தவர்களாகத் தான் இருவரையும் கவிஞர் படைக்கின்றார்.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/10&oldid=1426354" இலிருந்து மீள்விக்கப்பட்டது