இரண்யவர்ம மகாராஜன், தன் மகன் பன்னிரண்டு வயசுப் பாலகனாயிற்றே, எங்ஙனம் அவனை அரசனுக்குவது என்று மயங்க, இந்தத் தரணிகொண்ட போசர் இரண்யவர்ம மகாராஜனிடம், ‘பல்லவமல்லன் அரசாள்வதற்கு தவம் செய்திருக்கிறான்; அஞ்சவேண்டா’ என்று கூறி உடன்படுமாறு செய்தார். பின்னர் யானைத்தலே போன்ற மகுடங்களைக் கொணர்ந்து அளித்தபொழுது இரண்யவர்மன் திகைக்கத் தரணிகொண்ட போசர், “இவை களிற்றின் தலையல்ல; நின் மகனுக்குரிய மகுடங்கள்; ஏற்றுக்கொள்க” என்று கூறி ஏற்குமாறு செய்தார். பின்னர்க் காஞ்சிக்கு அழைத்துச்சென்று நந்திவர்மன் என்று பெயர் சூட்டிப் பல்லவமல்லனே அரசனாக்கினார். இங்ஙனம் கடிகையாரும், அவர்களுள் ஒருவராகிய தரணிகொண்ட போசரும் ஏறத்தாழக் கி. பி. 710-இல் அரசனைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பங்கு கொண்டனர். (காஞ்சி புரம் வைகுண்டப் பெருமாள் கோயில் சிற்பங்களின் கீழ் உள்ள கல்வெட்டுத் தொடர்கள் இவற்றைக் கூறுகின்றன. S. I. I. Vol. IV, ST6:or 135 பார்க்க; 37 of 1888).
மேற்குறித்த பல்லவமன்னனாகிய நந்திவர்மனது ஆட்சிக் காலத்தில் சாளுக்கிய அரசனாகிய இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியின்மேல் படையெடுத்து வந்தான்; பல்லவரை முறியடித்துக் காஞ்சியில் நுழைந்தான்; கைலாசநாதர் கோயிலின் செல்வத்தைக் கண்டு வியந்தான்; ராஜஸிம் ஹேச்வரக்ருஹம்’ எனப்பெற்ற அக்கோயிலின் செல்வத்தை அக்கோயிலுக்கே அளித்தான். இதனை அக்கோயில் முன் மண்டபத் துாணில் கண்ட கல்வெட்டில் குறித்தான்; அன்றியும், ‘இதனை அழிப்பவர்களும், இவ்வரசனால்ல் அளிக்கப் பெற்ற தருமத்தை நிலைகுலையச் செய்பவரும் கடிகையிலுள்ள மகாஜனமான்களைக் கொன்றவர் புகும் உலகில் புகுக’ என்றும் எழுதியிருக்கிறான். இதனால் கடிகையாரிடம் பல்லவப் பகைவனாகிய விக்கிரமாதித்தனுக்கு இருந்த பெருமதிப்பு விளங்குகிறது. இதில் கடிகையாரை மகாஜனமான் என்று கூறியிருப்பது அறியத்தக்கது.