காஞ்சிபுரத்தின் வடக்கில் அமைந்தது. தெற்கிலும் ஓரிரண்டு ஏரிகள் இருந்தமை கல்லெழுத்துக்களிற் காண்கிறோம். இனி, காஞ்சிபுரத்தை மயிலுக்கு ஒப்பிட்டுக் கூறிய தண்டி, கடிகை காஞ்சிபுரத்தின் மேற்கில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்; அப்பாடல் வருமாறு :
“ஏரி யிரண்டும் சிறகா எயில் வயிருக்
காருடைய பீலி கடிகாவா - நீர்வண்ணன்
அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே
பொற்றேரான் கச்சிப் பொலிவு.”
இதில் அத்தியூர் என்பது வரதராசப்பெருமாள் கோயில் உள்ள நகரப் பகுதி. இது காஞ்சியின் கிழக்கெல்லையாகும். கடிகாவா என்பது கடிகாவாக என்பதன் ஈறு தொகுத்தல். கடிகா என்பது காஞ்சிக் கடிகை. இங்ஙனம் பொருள் கொள்ளாது, ‘கடி-கா’ எனக் கொண்டு, நறுமணம் பொருந்திய சோலை’ என்றே பொருள் தரப்படுகிறது. சம்பந்தர்,
‘குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குராமரவம்
திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம்’
‘சேலு லாம்பொழில் கச்சி ஏகம்பம்’
‘ஏரினர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம்’
என்ற பகுதிகளில் கச்சிக்கு அடையாகப் பொழிலைக் கூறினார்;
‘கச்சி தன்னுள் திண்ணமாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம்’
‘கச்சி மாநகருள் ஏல நாறிய சோலை சூழ் ஏகம்பம்’
‘கச்சி மாநகருள் மரவம் பொழில் சூழ் ஏகம்பம்’
என்ற இடங்களில் ஏகம்பத்துக்கு அடையாகப் பொழிலைக்