திரிபாகலாம். இது போன்ற இன்னும் பல சிற்றுார்களும் அடங்கிய நகரமே கங்கைகொண்ட சோழபுரமாகும்.
கங்காபுரி
இந்நகரம் கங்காபுரி என்றும், கங்கை மாநகர் என்றும், கங்காபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது. வீரராசேந்திர சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டிற்குரிய மணிமங்கல சாஸனம், பெரும்புனற்றனாது கங்கைமாநகர் புகுந்தபின்’ என்றும், ‘இகலிடைப் பூண்ட ஜயத்திருவொடும் கங்காபுரி புகுந்தருளி’ என்றும் கூறுதல் காணலாம். கங்காபுரம் என்று தண்டியலங்கார மேற்கோட் பாடலில் உள்ளது.
அறங்கள் பல
பெருநகரமாகத் திகழ்ந்த கங்காபுரியில் வாழ்ந்தோருள் பலர் பல்வேறு அரசர்கள் காலத்தில் தம்மாலியன்ற அறங்களைச் செய்து வந்துள்ளமை பல ஊர்களிற் கண்ட கல்லெழுத்துக்களினின்று அறியப்பெறுகின்றது. அவ்வறங்களிற் சில காண்பாம்.
சிவபுரியில்
சிவபுரி என்பது தென்னுர்க்காடு மாவட்டத்தில் உள்ள ஒரூர். இங்கு முதல் இராசேந்திரனின் ஆட்சியாண்டு குறிக்கப்பெறாத கல்வெட்டுண்டு (510 of 1926). கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனையில் திருமஞ்சனம் ஆட்டும் பணி மகளிருள் ஒருத்தி ‘நாட்டாமை’ என்ற பெயருடையவள். அவள் சிவபுரிக் கோயிலுக்குச் சிறிது பொன் அறஞ்செய்தாள்.
தலைச்சங்காட்டில்
தலைச்சங்காடு என்பது சம்பந்தரால் பாடப்பெற்ற சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. இத்தலத்துள்ள திருவாய்ப்பாடி