45
அரசன்
பட்டயம் கொடுத்த அரசன் பெயர் விஜய ந்ரிப துங்கவர்மன் (வரி 45). ந்ரிபதுங்கவர்மன் (வரி 74), ந்ரிபதுங்க (வரி 24, 25, 32), துங்கவர்மன் (வரி 42) என்று பல உருவங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. இவன் நல்ல குணவான்; மூன்று உலகுக்குமரசன்; உதய சூரியன் போன்று ஒளிபடைத்தவன்; பாண்டியனுக்கு ஒருசமயம் படையுதவி செய்தவன் (செ. 16); பகை மன்னர் கூட்டத்தை அரிசிலாற்றங்கரைப் போரில் எரித்தவன்; புவனேசுவரனாகிய இவன் இளமை முதற்கொண்டு அரசர்களுள் புகழ் பொருந்தியவன்; இவன் புகழ் இராமன் போன்று பிற இடங்களிலும் பரவியுள்ளது (செ. 17:)
இவன் தந்தை-மூன்றாம் நந்திவர்மன்.
இவன் தாய்-சங்கா. இவள் முராரிக்கு இலக்குமி போலநந்திவர்மனுக்கு மனைவியாவள்; ராஷ்டிரகூட குலத்தில் தோன்றியவள்; உலகம் போலப் பொறையுடையவள்; தாய் போல் குடிமக்களால் விரும்பப்பட்டவள்; மிக்க அழகு உள்ளவள்; அரசனது நற்பேறே உருவெடுத்தாற் போன்றவள்; மதி காந்தி கலாதிகளையுடையவள்.
விண்ணப்பித்தவன்
நிருபதுங்கன் காலத்தில் வாகூர்ப்பகுதியில் ஆண்டு வந்தவன் வேசாலிப் பேரரையன் எனப் பெற்றான் (வரி 46). இவன் மார்த்தாண்டன் (செ. 18) என்ற இயற்பெயர் உடையவன்; நிலைதாங்கி என்ற சிறப்புப் பெயருடையவன்; குரு குலத்தில் பிறத்தவன்; தன்னைச் சரணடைந்த பிரஜைகளைக் காப்பவன்; உலகத்துக்குச் சந்திரன் போன்று திலகமாக விளங்குபவன்; சமுத்திரம்போல் கம்பீரமுடையவன்; சூரியன் போல் உலகை ரக்ஷிப்பவன்; உலகத்தில் நிலைபெற்றவன். இவனே ஆணத்தி வழியாக இச்செப்பேடுகளில் கண்ட அறத்தைச் செய்தான் (செ. 21).