பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


அண்மையில் சென்னையில் நடந்த இந்து தேவாலயப் பாதுகாப்பு மாநாட்டில் ஆரியப் பார்ப்பனரும் அவர்களைச் சார்ந்த வல்லடிமைத் தமிழர்களும் கொணர்ந்த தீர்மானங்கள் எந்தத் தமிழனின் குருதியையும் கொதிப்பேறச் செய்வன. “கோயில் ஆள்வினைகளை அரசினர் ஏற்கக் கூடாதென்பதும், நடைபாதைக் கோயில்களை அரசினர் அகற்றக் கூடாதென்பதும், தியாகராயர் நகர்த் திடீர்ப் பிள்ளையாரை மீண்டும் தோண்டிய இடத்திலேயே புதைக்க வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை. இக் கோரிக்கைகள் ஆரிய இனத்தின் வல்லாண்மையை இந்நாட்டில் மேலும் வேரூன்றச் செய்வதற்கான தந்திர மொழிகளே. பன்னூற்றாண்டுக் காலமாய் அடிமையுற்றுக் கிடந்த தமிழன் இப்பொழுதுதான் சிறிது கண்விழித்து எழுந்து அமர்ந்துள்ளான். இனி இவன் நடையிடத் தொடங்குவானானால் தமக்குற்ற போலிப் பெருமைகளெல்லாம் தலைகீழாகப் போய்விடும் என்பதை நன்குணர்ந்து கொண்ட இவ்வாரியப் பூஞ்சைகள், மேலும் தமிழினத்தை வீழ்த்தி அடிமை கொள்ளச் செய்யவே இக் கோரிக்கைகளை எழுப்பியுள்ளன. எனவே இத்தகைய கோரிக்கைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் துக்கியெறிந்து விட்டு, நாம் மேலே கூறிய திருத்தத்தைத் துணிந்து செயலாற்றுதல் வேண்டும் என வேண்டிக் கொள்கின்றோம்.

கோயிலில் இறைவழிபாடு செய்கையில் இவ்விடைத் தரகர்கள் எதற்காகக் குறுக்கே நிற்கவேண்டும். இவர்களுக்கும் இறைவனுக்கும் மட்டும் என்ன அவ்வளவு நெருக்கம்? நம்மையெல்லாம் அங்குள்ள இறைவனுக்குப் பிடிக்காதோ? பிடிக்காத நம்மை அவன் ஏன் நேரடியாகவோ – பிறர் வழியாகவோ படைத்தல் வேண்டும்? அங்குள்ள இறைப் படிமத்திற்கு வழிபாடு செய்பவர்கள் எப்படித் தமிழிலும் செய்யலாமோ, அப்படியே தாங்களாகவும் செய்யலாம் என்றும் ஒரு சட்டமியற்றுதல் வேண்டும். அதுவுமன்றி இவ் விடைத் தரகர்களே அங்குத் தேவையில்லை என்றும் செய்துவிட வேண்டும். தேவையானால் அங்குள்ள பொன்னையும் பொருள்களையும் காப்பதற்குக் காவல் வைத்துவிடலாம். இக்குமுகாயப் புரட்சியை இன்று செய்யத் தவறினால் வேறு என்றும் செய்ய முடியாது. கிறித்தவ, இசுலாமியத் திருக்கோயில்களில் இத்தகைய இடைத்தரகர்களா வழிபாடுகளை நடத்திக் கொடுக்கின்றனர்? எனவே இக்கோயில்களில் மட்டும் இந்தத் தரகர்கள் எதற்காக இருத்தல் வேண்டும்? இதுபற்றி நன்கு எண்ணி, பகுத்தறிவாளர்களின் அரசு என்று கூறிக்கொள்ளும் பெருமைக்கேற்ப, தமிழ்வழிபாட்டுடன், இம்மாற்றத்தையும் சேர்த்துச் செய்யுமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறோம்.

– தென்மொழி, சுவடி : 9, ஓலை : 3–4,