பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

157


போடப் பெறுகிறது! காஞ்சி காமகோடியாரின் இந்துமத வேத, புராணப் பரப்புதல் முயற்சிகளுக்கு இவர்கள் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தாலே, மக்களைத் திட்டமிட்டுத் தம் மதக்கோட்பாடுகளுக்கு இரையாக்கும் முயற்சி நன்கு புலப்படும். சமசுக்கிருத மொழி வளர்ச்சியில் இவர்களுக்குள்ள அக்கறை, தமிழ்வளர்ச்சியில் நம் தமிழர்களுக்கு இருக்குமானால் நம் இனம் இவ்வளவில் அடிமைப்பட்டிருக்காது. இவர்கள் இதழ்க்ளில் தமிழர் இனநலக் கட்சிகளுக்கோ, மொழிவளர்ச்சிச் செய்திகளுக்கோ சிறிதும் விளம்பரம் தருவதில்லை. ஆனால் தமிழர் இதழ்களிலோ, வேத புராண முயற்சிகளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்கள் தரப் பெறுகின்றன! இது மட்டுமா? அவர்களின் பாலியல் குப்பைத் தொட்டிகளாக விளங்கும் கவர்ச்சியேடுகளின் முதலாளிகளே தமிழர்கள் தாம்! அதிலும் தமிழ், தமிழின முன்னேற்றத்திற்கு உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழினத் தலைவர்கள்தாம் என்பதை மிக வருத்தத்துடன் கூறிக்கொள்ள வேண்டியிருக்கிறது! தமிழனின் தாராள மனப்பான்மை என்னும் இளித்தவாய்த் தன்மைக்கும், காட்டிக் கொடுக்கும் இரண்டகச் செயலுக்கும், குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் இழிந்த அடிமைத்தனத்திற்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்?

இன்னொன்றை இங்கெடுத்துக் காட்டுவது மிகமிக இன்றியமையாதது. இக்கால் பிராமணர் நடத்தும் இதழ்கள் சிலவற்றில், பச்சையாகவும் கொச்சையாகவும் தாறுமாறான பாலியல் வெறிவுணர்வு நிரம்பிய கதைகளும் கட்டுரைகளும் வண்ணப் படங்களுடன் வெளியிடப்பெற்று வருகின்றன. இவை தமிழ்ப் படிக்கும் மக்களிடையில் மொழித் தாழ்ச்சியையும் மனத்தளர்ச்சியையும், அறிவுவீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்பது உறுதி. இந்நிலைகளுக்கிடையில் சமசுக்கிருதம் உயர்வானது; வேதமதமாகிய இந்துமதக் கொள்கைகள் உயர்ந்தன என்னும் எண்ணம் வளரும்படி ஒருவகைக் கருத்து. கரவாகவும் சூழ்ச்சியாகவும் பரப்பப்பட்டு வருகிறது. தமிழர்கள் இந்நிலையை மிகவும் எச்சரிக்கையாக எண்ணி உணர்ந்து கொள்வதுடன், அவ்விதழ்களை அறவே புறக்கணிக்கவும் வேண்டும் என்பது அறிந்துகொள்க.

இனி, தமிழ் மொழியின் இயற்கையமைப்பையும் அதன் அறிவியல் கூறுபாடுகளையும் அறியாதவர்களே, அம்மொழியைவிட, சமசுக்கிருதத்தை உயர்வாகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் கருதுவர். உண்மையில் சமசுக்கிருதத்தின் மொழியியல் அமைப்பையும், அதன் கலவைத் தன்மையையும் அறிந்த எவரும், அதனை உயர்தனிச் செம்மொழியாகிய, தமிழினும் உயர்வாகக் கருத மாட்டார்கள். இந்நிலையில்தான் சமசுக்கிருத மொழியைப் பற்றி இக்கால் அரசியல்