பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

கொள்கையும் (துவைதாத்துவைதம்), சிறப்பு ஒருமைக் கொள்கையும் (விசிட்டாத்துவைதம்) ‘ஆன்மீக’ முறையில் ஒரே கொள்கையைத்தான் சொல்கின்றனவா என்பதை வீரப்பன் உறுதிப்படுத்திக் கூற முடியுமா? இவ்வாறு எதையுமே இன்றுவரை தெளிவுபடுத்தி வரையறுக்க முடியாததும், குழப்பம் விளைப்பதும், சூழ்ச்சிக்காரர்களின், சுரண்டல்காரர்களின், ஏமாற்றுக்காரர்களின், மதவெறியர்களின் கோட்பாடாகவுமே உள்ள மதநெறியையே வீரப்பன் ‘ஆன்மீகம்’ என்று சொல்கிறாரா? இல்லை, இந்துமதம் என்று சொல்லப்படுகின்ற மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாக உள்ள ஒரு மதத்தின் நெறியைமட்டுமே ஆன்மீகநெறி என்பதாக வீரப்பன் சொல்கிறாரா? அவர் மிகப் பெரிதாக விளம்பரப்படுத்திப் பேசும் ‘ஆன்மீக நெறி’ எது, அதன் செயல் வரம்புகள் எவை என்பதை அவர் தெளிவாகக் கூறவேண்டும்! இல்லை, தெரியாத ஊருக்குப் போகாத பாதை காட்டும் இம் முந்திரிக்கொட்டை அமைச்சர் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும்!

‘ஆன்மீகம்’ என்னும் பெயரில் இந்நாட்டில் நீண்ட நெடுங்காலமாக மத வல்லாண்மைக்காரர்களால் அறியாமையும், மூடநம்பிக்கையுமே பரப்பப்பட்டு வருகின்றனவே, அவற்றையெல்லாம் சரி என்று வீரப்பன் கூறுகிறாரா? இல்லை, இந்நாட்டில் பார்ப்பனிய மதம் என்று கூறப்படும் வேத வருணாச்சிரமக் கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டு, சாதி வேறுபாடுகளை இறைவனே படைத்தான்; அவற்றின் அடிப்படையிலேயே'வாழ்வியல் அமைப்புகள், வாழ்க்கை நலன்கள் முதலியவை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; அரசும் அவற்றுக்கே இசைவாக நடக்கவேண்டும் என்று இந்துமதம் கூறுகிறதே, அவற்றை யெல்லாம் வீரப்பன் சரி என்று ஒப்புகிறாரா? அப்படியானால் இவர் அமைச்சராக இருக்கமுடியாதே! நாலாந்தரச் சூத்திரனுக்கு அமைச்சுப் பதவியும் ஆட்சிப் பொறுப்பும் இவர் கூறும் இந்துமத ‘ஆன்மீக நெறிப்படி’ இருக்கக் கூடாதே! அதைச் சரியென்று கூறி, ஆட்சியை விட்டு, இவர் வெளியே வந்துவிட ஒப்புகிறாரா? இவர் என்ன சொல்லுகிறார்? எதைத் தாங்க விரும்புகிறார்? ஏன் இவர்க்கு இப்படி மூளை கூழையாகிப் போனது? காஞ்சிப் பெரியவாள் கருணாநிதிக்கும் வீரமணிக்கும் வேண்டிய ‘சாவிப்பு வேண்டுதல்’ போல், இவருக்கும் பித்தம் பிடித்து உளற வேண்டும்’ என்று அவரின் ‘உறவுத் தாத்தா’ கடவுளிடம் வேண்டிக் கொண்டாரா?

‘பகுத்தறிவு, சீர்திருத்தம் என்கிற பெயரில் நடைபெறும் செயல்கள் நம்மை, அறியாமை இருளில் தள்ளுவனவாக உள்ளன. இவற்றிலிருந்து