பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

231

மேலும், இந்தச் சாம்பலை, அதைச் சார்ந்தவர்களோ, அல்லது தொடர்பான ஒரு மதநிறுவனமோ தங்கள் செலவில், ஊர்ஊராக எடுத்துச்சென்று, மக்களின் பார்வைக்கோ, வழிபாட்டுக்கோ வைப்பதானால் நமக்குத் தடையோ, வருத்தமோ இல்லை. ஆனால் அரசே இச் செயலை மக்களின் வரிப்பணத்தில் செய்யக்கூடாது என்பதாலேயே, அறமன்றத்தை நாம் இதைத் தடுத்துநிறுத்தக் கோருகிறோம்.

மதச்செயல்களை அதிகார முறையில், அல்லது அதிகாரத்தின் பாதுகாப்பில் செய்யும்பொழுது, அவற்றால் மக்கள் ஏமாறவே செய்வர். இதனால், மக்களின் அன்றாட வேலைகளுக்குத் தடை நேர்கின்றன. அவர்களின் வரிப்பணம் பாழாகிறது. மேலும் ஏற்கனவே பல மூடநம்பிக்கைகள் நிறைந்த நாட்டில் மலும் இதுபோலும் புதிய மூடத்தனங்கள் வளர்வதற்கும் அவற்றால் மக்களை ஏமாற்றுவதற்கும் இது ஒரு வழியாகவும் மக்களில் சிலரால், பின்பற்றப்படக்கூடும் என்றும் அஞ்சுகிறோம்.

மேலும் இதுபோலும் முறைகளை, இனிவரும் காலத்தில் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் கடைப்பிடித்து மக்களை மேலும் மேலும் மூட நம்பிக்கைகளில் ஆழ்த்தவும் ஏமாற்றவுமே செய்வர். அதற்கு இது ஒரு தவறான எடுத்துக்காட்டாகவும் ஆகிவிடலாம் என்றும் கருதுகிறோம்.

எனவே, இச்செயலை உடனடியாக அறமன்றம் தடுத்து நிறுத்தி, மக்களுக்கு நலம் ஏற்படுமாறு செய்யக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி முடித்தார்கள்.

- தமிழ்ச்சிட்டு, இதழ் எண் : 48, 1984