பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

265


பின்னும், தொலைக்காட்சியில், இப்படிப்பட்ட இராமாயணக் கதையைத் தம் அதிகார, ஆணவ, பண வலிவாக்கத்தின் மமதையால் தில்லி வடவராட்சியும், இராசீவும் திட்டமிட்டு நாடெங்கும் பரப்பி வருவது, மீண்டும், தமிழின ஒடுக்கத்திற்கே அல்லது அழிப்புக்கே வழியமைத்துக் கொடுக்கும் கரவான அமைதிப் போர்த் தந்திரமே ஆகும்.

எனவே, இதை மீண்டும் ஒளிபரப்பக் கூடாதென்று, தமிழின நலம் நாடும் தலைவர்களும் மானமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிக்கைகளும் கோரிக்கைகளும் விடுப்பதுடன், போராட்டங்களும் நடத்துதல் வேண்டும்.

தெரிந்தோ, தெரியாமலோ, அல்லது உணர்ந்தோ உணராமலோ, தமிழினம் மிகக் கொடுமையான அரசியல் இனவியல் அழிவுச் சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், அது தங்களுக்குள்ள இன, மத, சாதியக் கட்சி வேறுபாடுகளிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு புறத்தே வரும் வரும் பருமனான இப் பகை நிலையிலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை யானால், இனி எதிர்காலத்தில் அது தன் ஒட்டுமொத்த வீழ்ச்சியினின்றும், அழிவிலிருந்தும் தன்னைக் காத்துக்கொள்ள முடியவே முடியாது என்பதை அனைத்துத் தமிழர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்தித் திணிப்பு என்பது மொழியாலும், தமிழகத்தில் இப்பொழுதுள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியென்பது அரசியலாலும், இராமாயண ஒளிபரப்புப் போன்றவை இனத்தாலும், தமிழினத்தின் மேல் ஒட்டுமொத்தமாகச் சூழ்ந்திருக்கும் போர் மூட்டங்களாகும். அத்துடன் இலங்கைச் சூழலால் தமிழின அழிப்பு வேலை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருவதையும் நாம் அறிவோம். இந்த நிலையில் அரசியல் பதவிகளுக்காக இங்குள்ள தமிழர்கள் அடித்துக் கொண்டும் பிடித்துக்கொண்டும் கிடப்பது அறிவுடைமையாகாது.

தமிழினத் தாக்கங்களைத் தமிழகப் பொதுமக்கள் உணரவில்லை. அவர்கள் உணராமல் இருப்பதற்கு நம் அரசியல் தலைவர்களே காரணம். அவர்களை ஏமாற்றி வாழ்வதே அவர்களது குறிக்கோளாகும். இந்நிலையில், தமிழின நல நாட்டமுடையவர்களே பெரும் அளவில் இம் முயற்சிகளில் பங்குகொள்ள வேண்டும். அதனடிப்படையில் ஒரு பெரும் பேரினக் கிளர்ச்சி தொடங்கப் பெறுதல் வேண்டும். அந்நிலையில் என்ன நடக்கும்? தமிழகத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகளல்ல; தொலைக்காட்சி நிலையங்களே உடைபடும்! இந்தி எதிர்ப்பன்று; இந்திய எதிர்ப்பே இங்கு நடக்கும்! இராசீவ் இல்லை; இராசீவ் இனமே இங்கிருந்து விரட்டியடிக்கப் பெறும் அது எப்போது? காலம் விடை சொல்லும்!

- தமிழ்நிலம், இதழ் எண். 101, 1988