பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

41


அவை எத்துணைதாம் அளவிறந்து காணப்படினும் அவற்றைச் சுட்டிச் சொல்லவே அஞ்சுவதையும், தமிழர்களின் அல்லது தமிழின் உண்மையான வரலாற்றுக் கருத்துகளை அவை எத்துணைதாம் உயர்வாகவும் உண்மை சான்றனவாகவும் இருப்பினும் அவற்றை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதையும், ஆனால் மறைத்துவிட முடியாமல் மேலோட்டமாகவே எழுதி அவற்றின் வலுவைக் குறைத்துவிடுவதையும் தெளிவாகக் காணலாம். இதனால் இவர்கள் இருபுறத்தாராலும் பாராட்டப் பெற வேண்டுமென்பதும், இவர்கள் நூல் நன்கு பரவவேண்டும் என்பதும் இவர்களின் உள்நோக்கமாக விருக்கலாம்.

அவ்வகையில் வெளிவந்ததாக அண்மையில் பண்டாரகர் மு. வரதராசனார் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலைக் குறிப்பிடலாம். இந்நூலில் திராவிடர்களின் வரலாறே துரானியர்களின் வரவிலிருந்துதான் தொடங்குகின்றது. அவர்கள் வருகையைப் பற்றிய காலக் குறிப்பீடும் இல்லை. தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று பலவிடங்களில் திருப்பித் திருப்பிச் சொல்லியிருக்கின்றார். தமிழ் எழுத்துத் தோற்றத்தை ஏனோ தானோ என்று மேலோட்டமாகவே குறித்திருக்கின்றார்.

“தமிழ் நூல்களையும் வடமொழி அறிஞர்கள் தக்க மதிப்புத் தந்து போற்றவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து தமிழே வீட்டில் பேசித் தமிழராகவே வாழ்ந்த வடமொழியறிஞர்கள் தேவாரம், திருவாசகம் முதலான தமிழ்நூல்களையும் படிக்காமல் புறக்கணித்தார்கள்” என்று, அடிவாங்கி அழுது கொண்டு வீட்டுக்கு வரும் சோணிப்பிள்ளை போல் முணகித் தொலைத்திருக்கின்றார். தெ.பொ.மீ அமர்ந்த இடத்தில் தாம் அமர்த்தி வைக்கப்பெற்றதன் பின் (1972இல்) வெளிவந்த நூல் இதுவாகையால், அவர் சாயலில் ஆரியத்தை முட்டுக் கொடுத்துத் தாங்கி வலிக்காமல் குட்டியிருக்கின்றார். இவர்தம் கைகள் வலிக்கும் என்று கருதினாரோ, அல்லது அவர்களின் மண்டை வலிக்கும் என்று கருதினாரோ தெரியவில்லை.

கழகக் காலத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள பகுதி இவரை வெறும் ஓர் இலக்கியப் பேராசிரியர் என்னும் அளவில்தான் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இதற்குப் போய் ‘வரலாறு’ எழுதுவானேன். கழகப் பாடல்களில் உள்ள கருத்துரைகளை யெல்லாம் பல தலைப்புகளில் திரட்டிப் பல்சுவைத் திரட்டுகளை