பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

61

காப்பாக வைத்துப் பேணப்பெறும்
வலிந்த கருவிகள்!

இறுதியாக, இவர்களின் இனவுணர்வு மிகவும் பாராட்டக் கூடியதாகும். இவர்களுக்குள்ளே இன்னொருவரைப் போற்றிக் கொள்ளும் தன்மையால் தான் இவர்கள் சிறிய அளவினராயிருப்பினும், இவர்களின் தனித்தன்மைகளை இன்று காறும் எவராலும் அழிக்கமுடியாமல் இருக்கின்றது. இவர்களைப் பார்த்துப் பிற இனத்தினர், குறிப்பாகத் தமிழர் தெரிந்துகொள்ள வேண்டிய - பின்பற்றக்கூடிய தன்மைகள் - பண்புகள் மிகுதியாகும். தாய்மொழிப் பற்று, இனப்பற்று, தன் இனத்தாரைப் பேணிக் கொள்ளும் தகைமை, தம்முள் ஒருவர் எவ்வளவு தாழ்ந்திருந்தாலும் அவரைப் பழித்துரையாமையும், காட்டிக் கொடாமையும், பிறருடன் ஒத்துப் போகவியலா விடத்துப் பழி கூறாமல் ஒதுங்கிவிடும் தன்மை, எந்த நிலையிலும், எவ்விடத்தும் தம் இனத்தவனைப் போற்றிக் கொள்ளும் தன்மை, உண்மையான திறமையுள்ளவனை மனம் விட்டுப் பாராட்டிப் பெருமை செய்யும் பரந்த பண்பு முதலிய அருங்குணங்களே ஓரினத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்துவனவும், காக்கின்றனவுமான வலிந்த கருவிகளாகும். அக்கருவிகள் இவ்வாரிய இனத்தாரிடம் இன்றளவும் காப்பாக வைக்கப்பெற்றுப் பேணப் பெற்று வருகின்றன.

தமிழர்களிடம் இவற்றுக்கு நேர்மாறான இழிந்த தன்மைகள் மிகப் பலவாகும். இவை பண்டைத் தமிழரிடம் இருந்தனவாகக் குறிப்பில்லை. இடையிடையே வந்த வேற்றினத்தவரிடமிருந்து கற்றுக் கொண்ட தீய பண்புகள் இவை. பன்னாடைகள் போல் நல்லனவற்றை விட்டு விட்டு அல்லனவற்றைத் தமக்கொவ்வாதனவற்றைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை தமிழினத்தின் கள்ளங் கவடற்றப் போக்கால் ஒட்டிக் கொண்டதாகும். இவ்விழி தகைமைகளை அறவே விலக்கினால் தவிரத் தமிழர் முன்னேற்றம் என்பது இந்தத் தலைமுறையில் மட்டுமன்று, இனி எந்தத் தலைமுறையிலும் கருதிப் பார்க்க முடியாத வொன்றாகும். இந்த மனமாற்றத்தை வலிந்தேனும் தமிழர்கள் உருவாக்கிக் கொள்ளவே இக்கட்டுரைக் கருத்துகள் பயனளிக்க வேண்டும். மற்றபடி ஆரியப் பார்ப்பனர் மேல் நமக்கு எவ்வகை வெறுப்பும் இல்லை. அவர்களை மட்டுமன்று, எத்திறத்தினரையும் நம்மவர்களாக ஏற்றுக் கொள்ளும் பண்பில் தமிழர்கள் யாருக்கும்