பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

79


இந்த மடலுடன் அங்குள்ள தெருக்களின் பெயர் வரிசை ஒன்றும் வந்துள்ளது. அதில் எள்ளத்தக்கனவும், வருந்தத் தக்கன வுமான பெயர்கள் பல. அவற்றுள் தமிழில் தெருக்களுக்குப் பெயர்கள் வைக்க வேறு பொருள்களோ, ஆட்களோ, இயற்கையறிவோ, வாழ்க்கை அறிவோ தமிழர்களுக்கு அறவே இல்லையென்று அங்குவரும் பிறநாட்டினர் கருதும்படி அமைந்துள்ள பெயர்கள் மிகப் பலவாகும். காற்றாடி, தொப்பி, தொட்டில், சேவல், முயல், குடை, கோழி, கட்டில், நாடா, ஊதி, கஞ்சிரா, கொத்துமல்லி, காக்கைப் பொன், ஒட்டகம், துலை(தராசு), மத்தளம், கண்ணாடி, கூழாங்கல், சீப்பு, கோடரி, நூல், ஊசி, மாடு, மான், அம்பு, கட்டாரி, கிளி, வாள், தாழ்ப்பாள், புறா, வாத்து, கயிறு, கிண்ணம், பாக்கு, பறவை, கம்பளி, கலப்பை, விளக்கு, கரண்டி, குழாய், பனைமரம், தேங்காய், எலுமிச்சை, மயில், பசும்புல், முதலியவற்றின் பெயர்களிலெல்லாம் அங்குத் தெருக்கள் உள்ளன. இதில் என்ன வியப்பு என்றால் இப் பெயர்களுக்கோ அத் தெருக்களுக்கோ எந்தவகைத் தொடர்பும் இல்லை. தேங்காய்த் தெருவில் பெயருக்குக் கூட ஒரு தேங்காயையோ தென்னை மரத்தையோ பார்க்க முடியாது. ஊசித் தெருவில் ஊசி இருக்காது. குடைத் தெருவில் மழைக்கு ஒதுங்கவும் இடமிருக்காது. தச்சர் தெரு என்று ஒரு தெரு அங்குத் தச்சர் ஒருவரும் இலர். ‘தோல்வித் தெரு’ என்று ஒரு பெயர்! இப்படித் தம் மனம்போன போக்கெல்லாம், இவர்களின் வேத மூளைக்கு எட்டியபடி யெல்லாம் ‘தெருப்பொறுக்கியின் கையில் இருப்பூசி’ கிடைத்ததுபோல் மண்டைக்குடுமி உதிர உதிர எண்ணி அவர்கள் இத்தகைய பெயர்களை ஏன் வைத்தல் வேண்டும்? அது தான் ஆரியக் குறும்பு! அதற்குப் பொருள் இல்லாதது போல் தோன்றும்! ஆனால் அதனால் ஓரினமே அழியும்; ஒரு மொழியே குலையும். இது வரலாறு.

இவற்றையெல்லாம் ஒருபுறம் வளரவிட்டுக்கொண்டு ‘தமிழை வளர்க்கின்றேன்; இந்தியை எதிர்க்கின்றேன்' என்று வறட்டுப் பேச்சைக் கூட்டந்தோறும் பேசித் திரிவதில் என்ன பயன் விளையப் போகின்றது? இவற்றைப் பார்க்கையில் நாம் காலங்கருதி இடத்தால் செய்யவிருக்கும் வினையைக், காலங்கருதாமலும் இடம் கருதாமலும் செய்தால் என்ன என்று எண்ணத் தோன்றுகின்றதில்லையா? தமிழ்மானம் உள்ளவர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!

-தென்மொழி சுவடி : 4, ஓலை : 9, 1966