பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


9. வழக்கில் உள்ள
பழந்தமிழ்ப் பாக்கள்


பாக்களின் தோற்றம் :

பாக்கள், பொதுவாக, கடவுள்களையும், காவலர் களையும் பாராட்டும் புகழுரைகளோடு பிறந்தன. எப்பொழுதெல்லாம், வழிபாட்டு நெறி ஒன்று நிறுவப்படுகிறதோ, அல்லது ஓர் அரசகுலம் தோன்றுகிறதோ, பாணர் முதலாம் புகழ் பாடுவார் அவற்றைப் பாராட்டிப் பாடுவதன் மூலம் அக்கடவுள்களின் அக்காவலர்களின் அரவணைப்பைப் பெறத் தொடங்கினர். வேதங்கள் போலும் சமயப் பாக்களின் திறனாய்வை விடுத்துப் பார்த்தால், எந்த ஒரு மொழியிலும், சமயச்சார்பற்ற பாட்டு, அம்மொழி பேசும் அரசன், பாராட்டத்தக்க போர் வெற்றிகளைப் பெறும்போது பாடத் தொடங்கப் பெறுகிறது என முடிவு கொள்ளலாம். பாணர் முதலாம் இரவலர்கள், இறைச்சி மீன் பாலும், இனிய மதுவின் பாலும் தணியா வேட்கையுடையராய், எப்போதும் அரைப்பட்டினி யோடிருப்பர். காதல், போர் ஆகிய துறைகளில் மன்னர்களும், குறுநிலத் தலைவர்களும் பெறும் பெஞ்செயல்களைப், பாக்களில் வைத்துப் பாராட்டுவதன் மூலம், இறைச்சியையும், இனிய மதுவையும் பெற முயற்சிப்பர். தமிழ்க் கவிதைக்கலை, பிறந்த வழி தெளிவாக, உறுதியாக, இதுவே.

நனிமிகப் பழம் பாடல்களெல்லாம், உண்மையில் பேச்சு வழக்கிலிருந்த திருந்தாக் கிளைமொழிகளிலேயே இருந்தன. சமஸ்கிருத மொழி, சமஸ்கிருதமாக (அதாவது செப்பம் செய்யப்பெற்று, மரபுவழி நெறிப்படுத்தப்பட்டு, கண்டிப்பான இலக்கண விதிமுறைகளின் கீழ்க் கொண்டு வரப்பட்ட நிலை) திருந்திய வடிவமாக ஆக்கப்பட்டு வேதமந்திரங்களின் யாப்பு முறைகளும், இலக்கிய மரபுகளும் தோன்றுவதற்கு முன்னர்ப், பல நூறு ஆண்டுகாலம் வழக்கில் இருந்திருக்க வேண்டிய சமஸ்கிருத நாடோடிப்பாடல்கள் அழிந்துபட்டது போலவே,