பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்கில் உள்ள பழந்தமிழ்ப் பாக்கள்

125


கொண்டிருந்தது. ஆகவே, தமிழிலக்கிய வளர்ச்சியின் நடுவிடமாக, இலக்கிய நடைத்தமிழ், அதாவது செந்தமிழ் வழங்கும் இடமாக மதுரை சிறந்து உயர்ந்தது வியப்புக்கு உரியதன்று. செந்தமிழ் நாட்டை அடுத்திருந்த, அவ்வந் நிலத்துக்கே உரிய கிளைமொழிகள் வழக்கில் இருந்த பன்னிரண்டு மாவட்டங்கள் குறித்துத் தமிழ் இலக்கணங்கள் ' குறிப்பிடுகின்றன. (“செந்தமிழ் சோர்ந்த பன்னிரு நிலம்”. தொல்காப்பியம் : சொல்லதிகாரம் : 9:3) நன்கு தெரிந்த ஒரு தமிழ்ப் பாட்டு, அச் செந்தமிழ் வழங்கும் பன்னிரு நாட்டையும், தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா நாடு, வேணாடு, பூழிநாடு, பன்றி நாடு, அருவாநாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு, மலையமா நாடு, சோழ நாடு என வரிசைப்படுத்திக் காட்டுகிறது.

“தென்பாண்டி, குட்டம், குடம் கற்கா, வேண், பூழி,
பன்றி, அருவா, அதன் வடக்கு , நன்றாய
சீதம், மலாடு, புனல் நாடு, செந்தமிழ்சேர்
ஏதம் இல் பன்னிரு நாட்டு எண்”

தொல்காப்பிய உரையாசிரியராய சேனாவரையர், தென்கிழக்கிலிருந்து வரிசைப்படுத்தத் தொடங்கி, பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்டநாடு, குடநாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழிநாடு, மலைநாடு, அருவா நாடு, இறுதியாக அருவாவடதலை நாடு என முடிக்கிறார். இறுதியாகக் கூறப்பட்டது. தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்த் தொண்டை நாடு என்றும், வட இந்திய எழுத்தாளர்களால் திராவிடம் என்றும் அழைக்கப்பட்ட நாடாகும்.

ஓரிடத்தில் வழங்கும் மொழி, ஏனைய இடங்களில் வழங்கும் மொழிகளைப் போலவே, சிறந்ததும் ஆம். அல்லது சிறப்பற்றதும் ஆம், ஆதலாலும், இலக்கியத்தமிழ், முதன் முதலில், பாண்டி நாட்டில் மேற்கொள்ளப்பட்டது ஆதலாலும், அவ்விலக்கியத் தமிழ், பிற நாடுகளில் பாக்களில் மேற்கொள்ளப்பட்டபோது, ஆங்கு வழக்கிலிருந்த, அந்நிலத்துக்குரிய சொற்கள் சில, அப்பாக்களில் இடம்