பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

145


ஒழுக்கமாம் நெய்தல் திணையோடு தொடர்புடையது. வெள்ளை நாரைகள் ஓயாது ஒலிக்கும், இனிய மணம் நாறும் கடற்கரையில், மலர் செறிந்த சோலையில் உள்ள அன்றலர்ந்த புதுமலர்களைக் கலக்கச் செய்து வீசும் அலைகள் வந்து மோதி, உடைந்து பின்னிடும் துறைக்கு உரியவனாகிய தலைவனோடு, பல்லெல்லாம் தோன்ற வாய்விட்டுச் சிரித்து அன்று மகிழ்ந்ததன் பயன், இன்று நம் இயற்கை அழகு அழிய, நம் தோள், நலம் கெட்டு மெலிய, அல்லல்படும் நெஞ்சோடு இரவெல்லாம் உறங்காமல், பசலையுற்று நாம் அழிந்து போவதுதானோ?"

"தொல்கவின் தொலைந்து, தோள்நலம் சாஅய்,
அல்லல் நெஞ்சமொடு அல்கலும் துஞ்சாது.
பசலை யாகி விளிவது கொல்லோ?
வெண்குருகு நரலும், தண்கமழ் கானல்,
பூமலர் பொதும்பர் நாண்மலர் மயக்கி
விலங்குதிரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே.
                        - குறுந்தொகை : 381

பிரிவுத் துயர் பொறாது துயர் உறும் ஓர் இளமகளை, அவள் தோழி தேற்றும் முறை இது: "தோழி! சுரத்தின்கண் உள்ள இலுப்பை மரத்தின் வெண்ணிறப் பூப்போலும் . மெத்தென்ற தலையை உடைய இறால் மீன்களுடன், திரளாகக் கிடைக்கும் பிற மீன்களையும் அகப்படுத்திக் கொள்ளுமாறு பின்னி விரித்த வலைகளை உடைய பரதவர்களின், வண்மைமிக்க தொழிலில் வல்லவர்களாகிய சிறுவர்கள், காட்டில் மரங்களில் ஏறி நின்று மானியங்களை வெருட்ட விரும்பி விரைந்து செல்லும் வேட்டுவச் சிறார்களைப் போல, மீன்பிடி படகில் ஏறிக்கொண்டு, கடல்பரப்பில் நெடுந் தொலைவு சென்று மரங்களை ஈர்த்துப் பிளக்கும் வாள் போலும் வாயையுடைய சுறா மீன்களுடன், பிற பெரிய மீனினங்களையும் பிடித்து, அவற்றைத் துண்டித்த இறைச்சிகள் நிரப்பிய தோணிகளோடு, மீண்டுவந்து, கடற் காற்று கழன்று அடித்துக் குவித்த மணல்பரப்பில் இறங்கும் உப்பங்கழி சூழ்ந்த நம் பாக்கத்தில், கல்லென ஆரவாரம். எழ,